வேத ஆயுத்த ஆடை பூங்கா மூலம் 21 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும்; வேதாரண்யம் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் ஓ.எஸ். மணியன் உறுதி

வேத ஆயுத்த ஆடை பூங்கா மூலம் வேதாரண்யத்தில் 21 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று அ.தி.மு.க.வேட்பாளர் அமைச்சர் ஓ.எஸ். மணியன் உறுதி அளித்தார்.

Update: 2021-03-27 00:45 GMT
ஆரத்தி எடுத்து வரவேற்பு 
வேதாரண்யம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.எஸ். மணியன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன்  சிறுதலைக்காடு, பன்னாள், கடினல்வயல், கருப்பம்புலம், ஆயக்காரன்புலம் 1-ம் சேத்தி, இரண்டாம் சேத்தி, மூன்றாம் சேத்தி, நான்காம் சேத்தி உள்ளிட்ட கிராமங்களில் திறந்த வேனில் வீதி, வீதியாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது அவருக்கு பட்டாசு வெடித்தும்,  மாலை அணிவித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

தையல் பயிற்சி 

பின்னர் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசியதாவது:-
வேதாரண்யத்தில் 21 ஆயிரம் பெண்களுக்கு ஆயக்காரன்புலத்தில் அமைய உள்ள வேத ஆயத்த ஆடை பூங்கா மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும். முதல்கட்டமாக வேதாரண்யத்தில் 2 கம்பெனிகளும், வாய்மேட்டில் 3-வது  கம்பெனியும் தொடங்கப்பட்டு 500 பெண்களுக்கு வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 4-வது கம்பெனி கத்தரிப்புலத்திலும், 5-வது கம்பெனி கரியாப்பட்டினத்திலும், 6-வது கம்பெனி தாமரைப்புலத்திலும் தொடங்கப்பட உள்ளது. பெரிய குத்தகையில் 4,500 பேருக்கு உதவித்தொகையுடன் கூடிய தையல் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. 

தடுப்பணை அமைக்கும் பணி 
வேதாரண்யம் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. வாய்மேட்டில் 375 எக்டேர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் குடிமராமத்து பணியின் கீழ் நல்லாங்கி ஓடையில் தடுப்பணை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ரூ.35 லட்சத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.14 லட்சத்தில் பயணிகள் நிழலக  கட்டுமான பணிகள் வாய்மேடு கடைத்தெருவில்  நடைபெற்று வருகின்றன. வேளாண்மை விரிவாக்க மையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வேதாரண்யம் பகுதி சாலையில் உள்ள 
குழாய் பாலங்கள் அகற்றப்பட்டு 145 இடங்களில் கல்வெட்டு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

துறைமுகம் அமைக்கும் பணி 
வேதாரண்யம் தாலுகாவில் உள்ள ஏராளமான குளங்கள், ஏரிகள் தூர்வாரப்பட்டு உள்ளது. சுனாமி மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாப்பதற்காக நிரந்தரமான அடுக்குமாடி குடியிருப்புகள், 6 ஆயிரம் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வெள்ளப்பள்ளத்தில் ரூ.100 கோடியிலும், ஆறுகாட்டுத்துறையில் ரூ.150 கோடியிலும் படகுகளை நிலைநிறுத்துவதற்கு துறைமுகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரடியம்புலத்தில் ரூ.83 கோடியில் மீன்வள பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. ரூ.570 கோடியில் அடப்பாறு, அரிச்சந்திராஆறு, வெள்ளாறு, பாண்டவைஆறு, வளவனாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளக்காலங்களில் வெள்ள சேதம் ஏற்படாதவாறு தடுக்கும் விதத்தில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 

ரூ.13 கோடியில் ஐ.டி.ஐ.
செம்போடையில் ரூ.13 கோடியில் ஐ.டி.ஐ. தொடங்கப்பட்டுள்ளது. மீண்டும் என்னை எம்.எல்.ஏ. ஆக தேர்ந்தெடுத்தால்  ஐ.ஆர்.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு  தேவையான பயிற்சி மையத்தை எனது சொந்த செலவில் வேதாரண்யத்தில் கொண்டு வருவேன். பல்வேறு நலத்திட்டங்கள் தொடர    எனக்கு இரட்டை இலையில் வாக்களிக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

இதில் ஒன்றிய செயலாளர்கள் கிரிதரன், சுப்பையன், ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜசேகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமையன், தமிழரசி, பானுமதி சுப்பிரமணியன், நெல்சன் யாசர் பிரபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்