சத்தியமங்கலம், டி.என்.பாளையம் பகுதியில் பலத்த சூறாவளிக்காற்றில் 55 ஆயிரம் வாழைகள் நாசம்

சத்தியமங்கலம், டி.என்.பாளையம் பகுதிகளில் வீசிய பலத்த சூறாவளிக்காற்றில் 55 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசம் ஆனது.

Update: 2021-03-26 23:01 GMT
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம், டி.என்.பாளையம் பகுதிகளில் வீசிய பலத்த சூறாவளிக்காற்றில் 55 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசம் ஆனது. 
சூறாவளிக்காற்று
சத்தியமங்கலம் அருகே உள்ளது  ராஜன் நகர், புதுப்பீர்கடவு. முற்றிலும் விவசாய பகுதியான இங்கு ஏராளமான விவசாயிகள் வாழைகளை பயிரிட்டு உள்ளனர். தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் வாழைகள் உள்ளன. 
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் சத்தியமங்கலம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதைத்தொடர்ந்து பலத்த சூறாவளிக்காற்று வீசியது. இந்த சூறாவளிக்காற்றில் தாக்குப்பிடிக்க முடியாமல் ராஜன் நகர் பகுதியை சேர்ந்த ரவி, குமார், மகேந்திரன், புதுப்பீர்கடவு பகுதியை சேர்ந்த ராஜன் உள்பட அந்த பகுதியை சேர்ந்த  விவசாயிகளின் தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் முறிந்து நாசம் ஆனது. 
வாழைகள் முறிந்து நாசம்
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘ராஜன் நகர் மற்றும் புதுப்பீர்கடவு பகுதிகளில் உள்ள விவசாயிகள் பலரும் நேந்திரம், செவ்வாழை உள்பட பல்வேறு வகையான வாழைகளை பயிரிட்டு உள்ளனர். நகைகளை வங்கிகளில் அடகு வைத்தும், பலரிடம் கடன் வாங்கியும் வாழைகளை விவசாயிகள் சாகுபடி செய்து உள்ளனர். ஆனால் சூறாவளிக்காற்றால் இந்த பகுதியில் பயிரிடப்பட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து விழுந்து நாசம் ஆகி விட்டன. இதன்காரணமாக விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே சத்தியமங்கலம் தாசில்தார் இங்கு  வந்து பார்வையிட்டு முறிந்து விழுந்து நாசம் ஆன வாழைகளுக்கு உண்டான இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
டி.என்.பாளையம்
இதேபோல் டி.என்.பாளையம், காளியூர், ஏழூர், மோதூர், கொங்கர்பாளையம், மூலப்பாளையம், கள்ளிப்பட்டி, கொண்டையம்பாளையம், வேட்டுவன்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் விவசாயிகள் பூவன், நேந்திரம், ரொபஸ்டா, கதலி போன்ற வாழைகளை பயிரிட்டு உள்ளனர். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் டி.என்.பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்று வீசியது. இந்த சூறாவளிக்காற்றில் அந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து நாசம் ஆனது. 
இதுபற்றி டி.என்.பாளையம் பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘வாழைகள் முறிந்து விழுந்ததில் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தபட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை போர்க்கால அடிப்படையில் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

மேலும் செய்திகள்