தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்; வாழைகள் சேதம்
தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் வாழைகள் சேதம் ஆனது.
தாளவாடி
தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் வாழைகள் சேதம் ஆனது.
வறட்சி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள யானைகள் தற்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் அடிக்கடி புகுந்து விடுகிறது. அவ்வாறு புகுந்து விடும் யானைகள் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு உள்ள வாழை, மக்காச்சோளம், கரும்பு போன்ற பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசப்படுத்திவிடுகின்றன.
4 யானைகள்
இதுபோன்ற சம்பவம் தாளவாடி அருகே நடந்து உள்ளது.
தாளவாடியை அடுத்த கெட்டவாடியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 48). விவசாயி. இவர் தன்னுடைய 3 ஏக்கர் தோட்டத்தில் வாழை பயிரிட்டு உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியை விட்டு வெளியேறிய 4 யானைகள் துரைசாமியின் தோட்டத்துக்கு வந்து உள்ளன. பின்னர் அந்த யானைகள் தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலிகளை பிய்த்து எறிந்துவிட்டு தோட்டத்துக்குள் புகுந்தன. இதைத்தொடர்ந்து தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைகளை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தின. அப்போது யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு தோட்டத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த துரைசாமி திடுக்கிட்டு விழித்து எழுந்தார். உடனே அவர் தோட்டத்தை பார்த்தபோது அங்கு 4 யானைகள் நின்று கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வாழைகள் சேதம்
இதைத்தொடர்ந்து அவர் அருகில் உள்ள விவசாயிகளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்று சேர்ந்து பட்டாசு வெடித்தும், தகர டப்பாவால் ஒலி எழுப்பியும் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அந்த 4 யானைகளும் வனப்பகுதிக்குள் சென்றன. தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் 1 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சேதம் ஆனது.
யானைகள் விவசாய நிலங்களுக்கு புகுந்து அட்டகாசம் செய்வதை தடுக்க அகழி அமைக்க வேண்டும் எனவும், யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வாழைகளுக்கு உண்டான இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.