ஆயுள்தண்டனை கைதி ஈ.டி.ராஜவேல் தற்கொலை

கோவையை உலுக்கிய அம்மாசை கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற வக்கீல் ஈ.டி.ராஜவேல் சிறைக்குள் துண்டால் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-03-26 20:54 GMT
கோவை,

கோவை சுந்தராபுரம் சிட்கோ குறிச்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பிரிவை சேர்ந்தவர் ஈ.டி.ராஜவேல் (வயது 52). இவருடைய மனைவி மோகனா (48). இருவரும் வக்கீல். 

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மோகனா ஒடிசா மாநிலத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.12 கோடி மோசடி செய்துவிட்டு தலைமறைவானார். இதனால் அவரை ஒடிசா போலீசார் தேடி வந்தனர்.

அதில் இருந்து தனது மனைவியை காப்பாற்ற ஈ.டி.ராஜவேல் கோவை ரத்தினபுரியை சேர்ந்த அம்மாசை (45) என்ற அப்பாவி பெண்ணை கொலை செய்தார். 

அம்மாசையை தனது மனைவி மோகனா போல் காட்டி,  அவர் இறந்துவிட்டார் என்று நாடகமாடி இறப்பு சான்றிதழ் பெற்று மனைவி மீதான ரூ.12 கோடி மோசடி வழக்கை ரத்து செய்ய, ஒடிசா போலீசாருக்கு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது.

இந்தநிலையில் சில மாதங்கள் கழித்து வக்கீல் ராஜவேல், கோவை கணபதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றார். 

பின்னர் அவர் தனது மனைவி மோகனா பெயரில் சொத்து ஒன்றை பதிவு செய்ய முயன்றார். அவர் கொடுத்த ஆவணங்களை சரிபார்த்த சார்பதிவாளர், இறந்தவர் மீது சொத்து பதிவு செய்ய முடியாது என்று கூறி மறுத்தார். 

இதைத்தொடர்ந்து மனைவியின் இறப்பு சான்றிதழை ரத்து செய்ய கோவை மாநகராட்சிக்கு ராஜவேல் விண்ணப்பித்தார். இதனால் சந்தேகம் அடைந்த மாநகராட்சி அதிகாரிகள் இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்தனர். 

இந்த புகாரை தொடர்ந்து கோவை மாநகர போலீசார் விசாரித்தபோது தான் அப்பாவி பெண் அம்மாசை கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளி உலகுக்கு தெரியவந்தது.

இதை தொடர்ந்து அம்மாசை கொலை தொடர்பாக வக்கீல் ஈ.டி.ராஜவேல், அவருடைய மனைவி மோகனா,  கார் டிரைவர் பழனிசாமி, உதவியாளர் பொன்னரசு ஆகிய 4 பேரை போத்தனூர் போலீசார் கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந் தேதி கைது செய்தனர். 

அவர்கள் மீது கொலை உள்பட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் பொன்னரசு அப்ரூவர் ஆனதால் அவர் இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் பிறழ் சாட்சியாக மாறினார். இதனால் மற்ற 3 பேர் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.

இந்த வழக்கு விசாரணை கோவை 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கோவையை உலுக்கிய இந்த வழக்கில் தீர்ப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. அதில் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 420 (பி) (மோசடி) ன் கீழ் ஈ.டி.ராஜவேல் மற்றும் மோகனாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

மேலும் மோகனா மற்றும் பழனிசாமி ஆகியோருக்கு இந்திய தண்டனை சட்டம்- 302 உடன் இணைந்த 109 (குற்றத்துக்கு உடந்தையாக இருத்தல்) -ன் பிரிவின் கீழ் ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். 

இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் இருந்த வக்கீல் ஈ.டி.ராஜவேல் தனது உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீன் கேட்டு பல முறை மனுதாக்கல் செய்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. 

இதனால் கடந்த சில நாட்களாகவே ஈ.டி.ராஜவேல் மன உளைச்சலில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை 11.50 மணியளவில் திடீரென அவர் குளிக்க பயன்படுத்தும் துண்டால் (டவல்) சிறைக்கம்பியுடன் சேர்த்து கழுத்தை இறுக்கி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். 

இதைப்பார்த்த சக கைதிகள் அதிர்ச்சியடைந்து சிறைத்துறை காவலருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் காவலர்கள் விரைந்து சென்று ஈ.டி.ராஜவேலுவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 

இருப்பினும் நேற்று மதியம் 2.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் இது தொடர்பாக ஆர்.டி.ஓ.விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
 அம்மாசை கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற கைதி ஈ.டி.ராஜவேல் சிறைக்குள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்