எடப்பாடி பழனிசாமி நள்ளிரவில் நாகர்கோவில் வந்தார்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நள்ளிரவில் நாகர்கோவிலுக்கு வந்தார். அவர் இன்று குமரியில் 3 இடங்களில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
நாகர்கோவில்,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நள்ளிரவில் நாகர்கோவிலுக்கு வந்தார். அவர் இன்று குமரியில் 3 இடங்களில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
எடப்பாடி பழனிசாமி
குமரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கான பொதுத்தேர்தலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பா.ஜனதா சார்பில் பொன்.ராதாகிருஷ்ணனும், கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் தளவாய்சுந்தரமும், நாகர்கோவில் தொகுதியில் பா.ஜனதா சார்பில் எம்.ஆர்.காந்தியும், குளச்சல் தொகுதியில் பா.ஜனதா சார்பில் ரமேசும், பத்மநாபபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஜாண் தங்கமும், விளவங்கோடு தொகுதியில் பா.ஜனதா சார்பில் ஜெயசீலனும், கிள்ளியூர் தொகுதியில் த.மா.கா. சார்பில் ஜூட் தேவும் போட்டியிடுகின்றனர்.
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அவர் இன்று (சனிக்கிழமை) குமரி மாவட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
இதற்காக நேற்று கயத்தாறில் பிரசாரத்தை முடித்து விட்டு கார் மூலம் நள்ளிரவு 11.50 மணிக்கு நாகர்கோவில் வந்தார். அவர் வடசேரியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கினார்.
வரவேற்பு
நாகர்கோவில் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு, ஓட்டல் நுழைவு வாயில் முன்பு கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தளவாய்சுந்தரம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
தொடர்ந்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன் (கிழக்கு), ஜான்தங்கம் (மேற்கு) ஆகிேயாரும் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். அப்போது அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். முதல்-அமைச்சர் வருகையையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பிரசாரம்
எடப்பாடி பழனிசாமி இன்று காலை 9 மணிக்கு நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்கிறார். பின்னர் தோவாளை மற்றும் ஆரல்வாய்மொழியில் அ.தி.மு.க. வேட்பாளர் தளவாய் சுந்தரத்தை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பிறகு குமரி மாவட்டத்தில் இருந்து நெல்லை மாவட்டம் புறப்பட்டுச் செல்கிறார்.