வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி

மின்னணு எந்திரங்களை கையாளுவது குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி நடந்தது.

Update: 2021-03-26 20:13 GMT
ஊட்டி,

ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் தொகுதி வாரியாக வாக்குச்சாவடி அலுவலர்களை ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. இதையடுத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி, ஊட்டியில் 3 பள்ளிகளில் நடைபெற்றது.

பயிற்சியை மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, ஊட்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மோனிகா பார்வையிட்டனர்.

ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு நியமிக்கப்பட்ட 31 மண்டல அலுவலர்கள் வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளுவது மற்றும் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளித்தனர்.

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-
வாக்குப்பதிவு நடைபெறும் வருகிற 6-ந் தேதிக்கு முந்தைய நாள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் பொருட்கள் மண்டல அலுவலர்கள் முன்னிலையில் வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் ஒப்படைக்கப்படும்.

இந்த பொருட்களை சரிபார்த்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களை பொருத்தி மின்இணைப்பு கொடுக்க வேண்டும்.
வாக்காளர்கள் உள்ளே வரும் வழி, வெளியே செல்லும் வழி, மாற்றுத்திறனாளிகள் வருவதற்கான சாய்வு தளம் ஆகிய இடங்களில் அடையாள குறியீடுகளை ஒட்ட வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கான சின்னம் பதிவாகிறதா? என்று மாதிரி வாக்குப்பதிவு நடத்த வேண்டும். இதனை உறுதி செய்த பிறகு மாதிரி வாக்குகளை அழித்து, தேர்தல் வாக்குப்பதிவுக்கு தயாராக வேண்டும்.

வாக்குப்பதிவின்போது ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் உடனடியாக மண்டல அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தேர்தல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடப்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்க வேண்டும். 

தேர்தல் ஆணையம் வழங்கிய விதிமுறைகளை வாக்குச்சாவடி அலுவலர்கள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்