ரூ.64 லட்சம் தங்க கட்டிகள், நகைகள் பறிமுதல்

ரூ.64 லட்சம் தங்க கட்டிகள், நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-03-26 19:15 GMT
பறிமுதல்
கோவை,

தமிழக சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை மற்றும் நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 

இவர்கள் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், தங்ககட்டிகள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவை-திருச்சி சாலையில் அல்வேனியா பள்ளி அருகில் தெற்கு தொகுதி பறக்கும் படை அதிகாரி சுதாகரன் தலைமையில் ஊழியர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அதனை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது காரில் இருந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பூரண சிங் மற்றும் கோபால் சிங் ஆகியோர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.57 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பிலான 1,282 கிராம் தங்க நகைகளை எடுத்து வந்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த ரூ.45,680 ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றி கோவை தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பறக்கும் படையினர் பேரூர் செல்வபுரம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

பறக்கும் படை அதிகாரி மகேந்திரன் தலைமையிலான குழு அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை நடத்தினர். அப்போது காரில் ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் மற்றும் நகைகள் இருந்தது தெரியவந்தது. 

ஆனால் காரில் இருந்த கரூர் மாவட்டம் வாசுகி நகரை சேர்ந்த பிரஜித் (வயது 30) என்பவரிடம் தங்க கட்டி மற்றும் நகைகளுக்கு உரிய ஆவணம் இல்லை. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் கோவை கருவூலகத்தில் அதனை ஒப்படைத்தனர்.

பேரூர் மெயின் ரோடு சிவாலயா சந்திப்பில் பறக்கும் படை அதிகாரி ரகுநாதன் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தீத்திபாளையம் கிருஷ்ணா காலனியை சேர்ந்த ராஜேந்திரனிடம் சோதனை நடத்தி ரூ.77 ஆயிரம் பறிமுதல் செய்தனர். 

அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் பறக்கும் படை அதிகாரி சந்திரபிரியா தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. 

அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்ததில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 890 இருந்தது. ஆனால் காரில் இருந்த பீளமேடு புரானி காலனியை சேர்ந்த ஹகிமுதீன் (42) பணத்திற்கு உரிய ஆவணம் காண்பிக்க வில்லை. இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து கருவூலகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்