வாக்கு சாவடியை தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் ஆய்வு
கொடியம்பாளையம் தீவு கிராமத்திற்கு படகில் சென்று வாக்கு சாவடியை தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் ஆய்வு செய்தார்.
கொள்ளிடம்:
கொடியம்பாளையம் தீவு கிராமத்திற்கு படகில் சென்று வாக்கு சாவடியை தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் ஆய்வு செய்தார்.
கொடியம்பாளையம் தீவு கிராமம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் தீவு கிராமம் உள்ளது. இங்கு 450 குடும்பங்களை சேர்ந்த 530 ஆண் வாக்காளர்களும், 518 பெண் வாக்காளர்களும் மொத்தத்தில் 1,048 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தீவு கிராமத்துக்கு கொள்ளிடத்தில் இருந்து சிதம்பரம் வழியாக பிச்சாவரம் சென்று அங்கிருந்து கொடியம்பாளையம் கிராமத்துக்கு செல்வதற்கு 25 கிலோ மீட்டர் தூரம் கடந்து செல்ல வேண்டும். கடந்த 5 வருடங்களாக இந்த கிராமத்துக்கு வாக்கு பெட்டிகள் சாலை மார்க்கமாக எடுத்து செல்லப்படுகிறது.
கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உரிய பாலம் கட்டப்படாததால் கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு கிராமத்தில் இருந்து படகு மூலம் ஒவ்வொரு தேர்தலின் போதும் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து ெசல்லப்பட்டு வாக்குப்பதிவு முடிந்தவுடன் மீண்டும் படகின் மூலம் பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டு வந்தது.
வாக்கு சாவடி ஆய்வு
சாலை வழியாக செல்ல தூரம் அதிகமாக இருப்பதால் நேற்று முன்தினம் தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் பழையாறு துறைமுகத்தில் இருந்து படகு மூலம் கொடியம்பாளையம் கிராமம் சென்று அங்கு உள்ள வாக்கு சாவடியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குடிநீர் வசதி, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு செய்தார். கிராம நிர்வாக அதிகாரி பவளச்சந்திரன், தேர்தல் சிறப்பு தாசில்தார் சுந்தரம், ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.