பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும் என்று கலெக்டர் எஸ்.நாகராஜன் கூறினார்.

Update: 2021-03-26 18:20 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி, வால்பாறை (தனி) தொகுதியில் பணிபுரியும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி உடுமலை ரோட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது. 

இதில் மின்னணு வாக்குபதிவு எந்திரங்களை பயன்படுத்தும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான எஸ்.நாகராஜன் பயிற்சியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

மேலும் தபால் வாக்கு மையத்தில் செய்யப்பட்டு உள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வைத்திநாதன் (பொள்ளாச்சி), துரைசாமி (வால்பாறை) மற்றும் பலர் உடன் இருந்தனர். 

ஆய்வுக்கு பின் கலெக்டர் எஸ்.நாகராஜன் கூறியதாவது:-

பதற்றமான வாக்குச்சாவடிகள்

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 4,427 வாக்குச்சாவடிகள் உள்ளன. 21 ஆயிரத்து 136 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தலில் பணிபுரிகின்றனர். 

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறியப்பட்டு உள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

கொரோனா பாதிப்பு காரணமாக அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகழுவுதல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். 

கொரோனா பாதிப்பு அதிகரித்தால் மீண்டும் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்