உடுமலை பகுதியில் நோய் தாக்குதலால் அதிக அளவில் பட்டுப்புழுக்கள் உயிரிழப்பதாக விவசாயிகள் வேதனை

உடுமலை பகுதியில் நோய் தாக்குதலால் அதிக அளவில் பட்டுப்புழுக்கள் உயிரிழப்பதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2021-03-26 16:59 GMT
போடிப்பட்டி
உடுமலை பகுதியில் நோய் தாக்குதலால் அதிக அளவில் பட்டுப்புழுக்கள் உயிரிழப்பதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கொரோனா தாக்கம்
தமிழகம் முழுவதும் வெண்பட்டுக்கூடு உற்பத்தியில் உடுமலை பகுதி விவசாயிகளின் பங்களிப்பு மிக அதிக அளவில் உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் உப தொழிலாக கால்நடைகள் வளர்ப்பது போல, மல்பெரி சாகுபடி செய்து பட்டு வளர்ப்பின் மூலம் வருவாய் ஈட்டி வருகிறார்கள். 
இந்தநிலையில் சமீப காலமாக பட்டு விவசாயிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். தற்போது உடுமலை பகுதியில் நோய் தாக்குதலால் புழுக்கள் அதிக அளவில் உயிரிழப்பதால் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவதுகொரோனாவின் தாக்கத்தால் பல தொழில்கள் முடங்கியது. அந்தவகையில் முழு அடைப்பின் போது பட்டு விவசாயிகள் உற்பத்தி செய்த பட்டுக்கூடுகளை விற்பதற்குக் கூட வழியில்லாமல் தவித்தனர். இதனால் மிகக் குறைந்த விலைக்கு விற்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கடும் இழப்பைச் சந்தித்த விவசாயிகளுக்குத் தேவையான உதவிகளை செய்து தர அரசோ பட்டு வளர்ச்சித்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அழுகும் புழுக்கள்
இதனால் பல விவசாயிகள் வெண்பட்டு உற்பத்தியை கைவிடும் நிலை ஏற்பட்டது. பல மாதங்களாக வெண்பட்டுக் கூடுகளின் விலை உயராத நிலையில் தற்போதுதான் படிப்படியாக உயர்வடைந்து வருகிறது. ஆனாலும் விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகாத விலையே உள்ளது. ஏனென்றால் ஆள் கூலி, இடுபொருட்கள் விலை ஆகியவை உயர்ந்துள்ளதால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் தற்போது கண்ணமநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் பட்டுப்புழுக்கள் கூடு கட்டும் பருவத்தில் பெரும்பாலான புழுக்கள் கூடு கட்டாமல் சுருண்டு விழுந்து உயிரிழக்கின்றன. அத்துடன் புழுக்களின் உடல் கருப்பு நிறமாகி அழுகி விடுகிறது. இதனால் புழு வளர்ப்பு மனை முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் எறும்புகளும் படையெடுக்கிறது. இதனையடுத்து அவ்வப்போது சுத்தம் செய்துகொண்டே இருக்க வேண்டிய நிலை உள்ளது.  இதற்கு அதிக அளவில் கூலி கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் 50 சதவீதத்துக்கும் மேலான புழுக்கள் கூடு கட்டாததாலும், அழுகிய புழுக்களால் பட்டுக்கூடுகளின் தரம் குறையும் நிலை உள்ளதாலும் கடும் இழப்பை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இது பால் புழு நோய் என்று கூறப்படுகிறது.இந்த நோய் தாக்குவதற்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து அதற்கான தீர்வுகளைக் காண வேண்டியது அவசியமாகும்.ஆனால் பெரும்பாலான அதிகாரிகளுக்குத் தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளதால் இழப்பு பல மடங்காகும் அபாயம் உள்ளது.எனவே இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

மேலும் செய்திகள்