முதியோர், மாற்றுத்திறனாளிகள் 553 பேருக்கு தபால் வாக்கு

தேனி மாவட்டத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் 553 பேருக்கு தபால் வாக்குகள் வழங்கப்பட உள்ளது. வீடு தேடிச் சென்று இந்த தபால் வாக்குப்பதிவு நாளை மறுநாள் தொடங்குகிறது.

Update: 2021-03-26 16:35 GMT
தேனி:
தபால் வாக்குகள்
கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்கவுள்ளது. 

இதனால், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தபால் வாக்கு செலுத்தும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. 

இதற்காக தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டது. 

அத்தகைய நபர்களுக்கு வீடு தேடிச்சென்று தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவிப்பது தொடர்பாக படிவம் ‘12டி' வழங்கப்பட்டது.

சுமார் 20 ஆயிரம் பேருக்கு இந்த படிவம் வழங்கப்பட்டது. இதில் பலரும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க விருப்பம் தெரிவித்தனர். 600-க்கும் மேற்பட்டவர்கள் தபால் வாக்குக்கு விருப்பம் தெரிவித்தனர். 

அவர்களிடம் இருந்து பெறப்பட்ட படிவங்களை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பரிசீலனை செய்தனர். இதில் தகுதியுள்ள நபர்களாக 553 பேர் கொண்ட பட்டியல் இறுதி செய்யப்பட்டது. 

அதன்படி, ஆண்டிப்பட்டியில் 24 பேர், பெரியகுளத்தில் 283 பேர், போடியில் 136 பேர், கம்பத்தில் 110 பேருக்கு தபால் வாக்கு வழங்கப்படுகிறது.

வாக்குப்பதிவு குழுக்கள்
தபால் வாக்குச்சீட்டுகள் வினியோகம் செய்யும் பணி மற்றும் வாக்குப்பதிவு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதற்காக ஒரு வாக்குப்பதிவு அலுவலர், வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் 2 பேர், ஒரு போலீஸ்காரர், ஒரு நுண்பார்வையாளர் என 5 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 

இந்த குழுவினர் தபால் வாக்கு செலுத்த உள்ள வாக்காளரின் வீட்டுக்கு நேரில் சென்று படிவத்தை வழங்குவார்கள். அந்த படிவத்தை பெற்றுக் கொண்டு அவர்கள் வாக்குப்பதிவு செய்த பின்னர் அந்த வாக்குகள் வாக்குப்பெட்டியில் சேகரிக்கப்படும்.

பின்னர் அவை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்படும். 

தபால் வாக்குப்பதிவுக்காக வாக்குப்பதிவு குழுவினர் வருவதற்கு முன்பாக வாக்காளர்களுக்கு நேரிலும், செல்போன் குறுஞ்செய்தி வாயிலாகவும் இதுகுறித்த தகவல்கள் தெரிவிக்கப்படும். 

இந்த வாக்குப்பதிவின் போது வேட்பாளர்களின் முகவர்களும் வாக்குப்பதிவு குழுவினருடன் செல்லலாம். ஆனால், அவர்கள் அங்கு வாக்குசேகரிப்பில் ஈடுபடக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. 

அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந்தேதி வரை இந்த வாக்குப்பதிவு நடக்கிறது. இத்தகவலை தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்