நான் வெற்றி பெற்றவுடன் கொள்ளிடத்தில் தீயணைப்பு நிலையம் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்; அ.தி.மு.க. வேட்பாளர் பாரதி வாக்குறுதி
நான் வெற்றி பெற்றவுடன் கொள்ளிடத்தில் தீயணைப்பு நிலையம் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன் என்று அ.தி.மு.க. வேட்பாளர் பாரதி வாக்குறுதி அளித்துள்ளார்.
வாக்கு சேகரிப்பு
சீர்காழி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பி.வி. பாரதி கொள்ளிடம் ஒன்றிய பகுதி உட்பட்ட ஆனைக்காரன் சத்திரம், ஆச்சாள்புரம், ஆரப்பள்ளம், மகேந்திரப்பள்ளி, காட்டூர், முதலைமேடு, அளக்குடி, புளியந்துறை, புதுப்பட்டினம், தாண்டவன்குளம், பழையபாளையம், ஆகிய ஊராட்சிகளில் தீவிரமாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
தடுப்பணை
அப்போது அவர் கூறுகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. தற்காஸ் தென்னம்பட்டினம் ஆகிய உப்பனாற்றில் இரண்டு இடங்களில் தலா ரூ.10 கோடியில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. எருக்கூர் கிராமத்தில் ரூ.68 கோடி மதிப்பீட்டில் நெல் சேமிப்பு கிடங்கு மற்றும் தானியங்கி எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
மீன் உளர்தளம்
கூழையார் மடவாமேடு, பழையார், திருமுல்லைவாசல் ஆகிய கடற்கரை கிராமங்களில் ரூ.1 கோடியில் மீன் உளர்தளம் அமைக்கப்பட்டுள்ளது. கொடியம்பாளையம் கிராமத்தில் ரூ.3 கோடியே 50 லட்சத்தில் மீன் உளர்த்தும்தளம், சாலைகள், படகு பழுதுபார்க்கும் தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.தொகுதி முழுவதும் பல திட்டங்களை செயல்படுத்தி உங்களிடம் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். எனவே நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கொள்ளிடம் பகுதி பொதுமக்கள் அ.தி.மு.க.வை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். நான் வெற்றி பெற்றவுடன் கொள்ளிடத்தில் தீயணைப்பு நிலையம் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
அப்போது ஒன்றிய செயலாளர்கள் நற்குணன், சிவக்குமார், மாவட்ட துணை செயலாளர் செல்லையன், மாவட்ட மகளிரணி செயலாளர் சக்தி, பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன், த.மா.கா. மாவட்ட இளைஞரணி தலைவர் வரதராஜன், பாரதீய ஜனதா கட்சி ஒன்றிய செயலாளர்கள் ஆனந்தராஜ், நேதாஜி, கூட்டுறவு சங்க தலைவர் ஆனந்த நடராஜன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் நாகரத்தினம், கட்சி நிர்வாகிகள் சொக்கலிங்கம், இனியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.