அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை அமுதசுரபி போன்றது - டாக்டர் ராமதாஸ் பேச்சு
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை அமுதசுரபி போன்றது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
திருவள்ளூர்,
பூந்தமல்லி (தனி) தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ராஜமன்னார் மற்றும் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ரமணா ஆகியோரை ஆதரித்து திருவள்ளூரை அடுத்த காக்களூரில் பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாஸ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். எனவே பெண்கள் நினைத்தால் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியும்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நல்லாட்சி கொடுத்து வருகிறார்.
தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதம் ரூ.1,500, ஒவ்வொரு வீட்டுக்கும் விலையில்லா வாஷிங் மெஷின், ஆண்டுக்கு 6 இலவச கியாஸ் சிலிண்டர்கள், தேசிய ஊரக வேலை திட்ட 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ளார். அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை அமுதசுரபியை போன்றது. நாட்டின் வளர்ச்சியின் ஆயுதமாகும். பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை நாட்டின் வளர்ச்சியின் ஆயுதம். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை சினிமா வசனம் போல் உள்ளது.
அவர்களது தேர்தல் வாக்குறுதி பொதுமக்களிடையே எடுபடாது. வருகி்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும். தி.மு.க.வின் பொய் பிரசாரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாறக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.