சேலம் மாநகரில் கடந்த 25 நாட்களில் 93 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிப்பு

கடந்த 25 நாட்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 93 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் கூறினார்.

Update: 2021-03-25 23:50 GMT
சேலம்:
கடந்த 25 நாட்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 93 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் கூறினார்.
மருத்துவ முகாம்
சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலம், நாராயண நகர் பாவடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கொரோனா நோய் தொற்று கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதை மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வீடு, வீடாகச் சென்று கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
93 பேருக்கு கண்டுபிடிப்பு
சேலம் மாநகராட்சி         சார்பில் 8 ஆயிரத்து 646 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதில் 4 லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. அதில் 39 ஆயிரத்து 943 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 964 பேருக்கு கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து கடந்த 1-ந் தேதி முதல் தினமும் 22 கொரோனா நோய் தொற்று கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை 448 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 19 ஆயிரத்து 943 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த வகையில் கடந்த 25 நாட்களில் 93 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், சிறப்பு மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்