சட்டசபை தேர்தலை முன்னிட்டு சேலத்தில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
சட்டசபை தேர்தலை முன்னிட்டு சேலத்தில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சேலம்:
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி வாக்குப்பதிவு நாளில் வெளியூர்களில் தங்கியிருக்கும் வாக்காளர்கள் தங்களது ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 1,056 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதைத்தொடர்ந்து சேலம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சேலத்தில் இருந்து திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சென்னை, சிதம்பரம், கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, பெங்களூரு ஆகிய முக்கிய நகரங்களுக்கு வருகிற 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. எனவே, பயணிகள் அனைவரும் கூட்ட நெரிசலை தவிர்த்து பயணம் செய்யலாம் என்று சேலம் அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.