நார் மில்லில் ஏற்பட்ட தீ விபத்து
காங்கேயம் அருகே நார் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
காங்கேயம்
காங்கேயம் அருகே நார் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
நார் மில்லில் தீ விபத்து
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சென்னிமலை சாலையில், நால்ரோடு பகுதியில் பழனிச்சாமி என்பவர் நார் மில் வைத்து, கயிறு உற்பத்தி செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் நார் மில்லில் நார் குவியல் வைத்திருக்கும் இடத்தில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென்று தேங்காய் நார் குவியலில் பரவி தீ பிடித்து எரியத் தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் பழனிச்சாமி உடனடியாக காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் காங்கேயம் தீயணைப்பு நிலைய அதிகாரி ம.சுப்பிரமணியன் தலைமையில் 5 வீரர்கள் தீ விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பல லட்சம் சேதம்
பின்னர் தீயணைப்பு வாகனத்தின் ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் இந்த தீ விபத்தில் தேங்காய் நார் உற்பத்தி மட்டை உரிக்கும் எந்திரம் மற்றும் கயிறு உற்பத்தி செய்யும் எந்திரங்கள் ஆகியவை எரிந்து சேதமடைந்தன. தீ விபத்தில் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.