552 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 552 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 552 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பதற்றமான வாக்குச்சாவடிகள்
திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தாராபுரம் தொகுதியில் 349 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி-1, பதற்றமான வாக்குச்சாவடிகள்-30 ஆகும். காங்கேயம் தொகுதியில் 372 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி-1, பதற்றமான வாக்குச்சாவடிகள்-48. அவினாசி தொகுதியில் 401 வாக்குச்சாவடிகள் இருக்கின்றன. இதில் 33 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. திருப்பூர் வடக்கு தொகுதியில் 535 வாக்குச்சாவடிகளில் 119 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை.
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் 401 வாக்குச்சாவடிகளில் 110 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. பல்லடம் சட்டமன்ற தொகுதியில் 548 வாக்குச்சாவடிகளில் 81 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. உடுமலை தொகுதியில் 380 வாக்குச்சாவடிகளில் 79 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் 357 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி-1, பதற்றமான வாக்குச்சாவடி-49.
122 கட்டிடங்கள்
மாவட்டத்தில் 3 ஆயிரத்து 343 வாக்குச்சாவடிகள் 1,108 கட்டிடங்களில் அமைந்துள்ளன. இதில் 3 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும், 549 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பதற்றமான வாக்குச்சாவடிகள் 122 கட்டிடங்களில் அமைந்துள்ளன.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார். இந்த மையங்களில் துணை ராணுவத்தினர், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் வாக்குப்பதிவு உள்ளிட்ட முழு நிகழ்வையும் வெப்கேமரா மூலமாக கண்காணிக்கவும் வசதி செய்யப்பட உள்ளது. கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
நுண்பார்வையாளர்கள்
திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் தொகுதியில் 11 வாக்குச்சாவடி மையங்களிலும், காங்கேயத்தில் 16 வாக்குச்சாவடி மையங்களிலும், அவினாசியில் 10, திருப்பூர் வடக்கு தொகுதியில் 17, திருப்பூர் தெற்கு தொகுதியில் 14, பல்லடம் தொகுதியில் 21, உடுமலை தொகுதியில் 22, மடத்துக்குளம் தொகுதியில் 13 என மொத்தம் 124 கட்டிடங்களில் இந்த பதற்றமான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன.
பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு அன்று நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். வங்கி அதிகாரிகள் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். அவ்வாறு 8 சட்டமன்ற தொகுதியில் 168 பேர் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு அவர்களுக்கு கணினி மூலமாக பணி ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார். பொது பார்வையாளர்களான ரவிசங்கர் பிரசாத் (தாராபுரம் மற்றும் காங்கேயம்), சந்தர் பிரசாத் வர்மா (அவினாசி), உமானந்தா டோலி (திருப்பூர் வடக்கு), மாஷீர் ஆலம் (திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம்), கபில் மீனா (உடுமலை மற்றும் மடத்துக்குளம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பயிற்சி வகுப்பு
பதற்றமான வாக்குச்சாவடிகளில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் நுண்பார்வையாளர்கள் கண்காணிக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன்சங்கர் ராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாகுல் அமீது (பொது), முரளி (தேர்தல்), தேர்தல் தாசில்தார் முருகதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட நுண்பார்வையாளர்களுக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் 2-வது தளத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.