பனமரத்துப்பட்டி அருகே 3 வயது மகனை கொன்று தாய் தற்கொலை

பனமரத்துப்பட்டி அருகே 3 வயது மகனை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-03-25 22:54 GMT
பனமரத்துப்பட்டி:
பனமரத்துப்பட்டி அருகே 3 வயது மகனை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து  கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கூலித்தொழிலாளி
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள கம்மாளப்பட்டி கிராமம் வடகாடு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 25). இவர் சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறை ஒன்றில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். 
இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு கேரளாவிற்கு வேலைக்கு சென்ற முத்துக்குமார் அங்கு ஸ்டெபியா (24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவரும் கம்மாளப்பட்டிக்கு வந்து வசித்து வந்தனர். இவர்களுக்கு அனித் (3) என்ற மகன் இருந்தான். மேலும் முத்துக்குமாரின் தம்பி ஜெயக்குமார் (10) என்ற சிறுவனும் இவர்களுடன் வசித்து வந்தான். 
அடிக்கடி தகராறு
முத்துக்குமாரும், ஸ்டெபியாவும் வேலைக்கு செல்லும் நேரங்களில் குழந்தை அனித்தை சிறுவன் ஜெயக்குமார் கவனித்து வந்துள்ளான். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஸ்டெபியா மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி சிறுவன் ஜெயக்குமாரை வீட்டில் இருந்து அனுப்பிவிடும்படி முத்துக்குமாரிடம் தகராறு செய்து வந்துள்ளார். 
இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஸ்டெபியா அடிக்கடி கோபித்துக் கொண்டு கேரளாவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிடுவார். முத்துக்குமார் அங்கு சென்று அவரை சமாதானப்படுத்தி அழைத்து வருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு ஸ்டெபியா சிறுவன் ஜெயக்குமாரை அடித்துள்ளார். இதில் ஜெயக்குமாரின் உதடு மற்றும் கன்னங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் ஏன் சிறுவனை இப்படி அடிக்கிறாய், உன் கணவரிடம் தெரிவிப்போம் என்று கூறியுள்ளனர். இதனால் பயந்து போன ஸ்டெபியா தன் கணவர் வந்தால் என்ன ஆகுமோ என பதற்றத்துடன் இருந்துள்ளார். 
உடல் மீட்பு
இந்த நிலையில் வேலைக்கு சென்ற முத்துக்குமார் இரவு 9 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீடு பூட்டப்பட்டு இருப்பதைக்கண்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார். அப்போது அவர்கள் நடந்ததை கூறி உள்ளனர். இதையடுத்து முத்துக்குமார், ஸ்டெபியாவையும் குழந்தை அனித்தையும் தேடி சென்றார். அப்போது வீட்டில் இருந்து 50 மீட்டர் தொலைவில் குழந்தை அனித் ஒரு பாறையில் இறந்த நிலையில் சடலமாக கிடந்தான். அடுத்த சிறிது தூரத்தில் ஸ்டெபியாவும் இறந்துகிடந்தார்.
இது குறித்து பனமரத்துப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சேலம் ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு உமாசங்கர், மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்டெபியா மற்றும் குழந்தை அனித் ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
தற்கொலை
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஸ்டெபியா கணவருக்கு பயந்து வீட்டில் அரளி செடிக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை மகனுக்கு கொடுத்து கொன்று விட்டு, தானும் குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து பனமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
3 வயது மகனை கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்