கவர்ச்சி திட்டங்களை அறிவித்து தி.மு.க., அ.தி.மு.க. மக்களை ஏமாற்றுகிறது; தேர்தல் பிரசாரத்தில் சீமான் பேச்சு

கவர்ச்சி திட்டங்களை அறிவித்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. மக்களை ஏமாற்றுவதாக தேர்தல் பிரசாரத்தில் சீமான் கூறினார்.

Update: 2021-03-25 22:50 GMT

சீமான் பிரசாரம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாமக்கல் பூங்கா சாலையில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது நாமக்கல் சட்டசபை தொகுதி வேட்பாளர் டாக்டர் பாஸ்கரை ஆதரித்து அவர் திறந்த வேனில் நின்றவாறு பேசியதாவது:- தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருகிறதே தவிர, அரசியல் மாற்றம் ஏற்படுவதில்லை. அது புரட்சி ஒன்றால் மட்டும் தான் முடியும். அனைத்து துறைகளிலும் சகிக்க முடியாத அளவு ஊழல் உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்புஇல்லை. தெருவுக்கு 2 படிப்பகங்கள் இருப்பதற்கு பதிலாக குடிப்பகங்கள் தான் உள்ளது.
தேசத்தின் பிள்ளைகளை அறிவார்ந்த சமூகமாக வளர்ப்பதற்கு இந்த நாட்டில் எந்த முயற்சியும் நடக்கவில்லை. தற்போது சமூகமே குற்றசமூகமாக மாறி வருகிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளை அரசு கொடுத்துவிட்டால் இது குற்றசமூகமாக இருக்காது. அதை பற்றி சிந்தித்து கவலைப்படும் தலைமை உருவாக வேண்டும்.
அரசியல்வாதிகள் எப்போதும் அடுத்த தேர்தலை பற்றி மட்டும் தான் சிந்திப்பார்கள். தலைவர்கள் மட்டும்தான் அடுத்த தலைமுறையை பற்றி சிந்திப்பார்கள். மக்களுக்கு கவர்ச்சி திட்டங்களை அறிவித்து, மயக்கி எவ்வாறு ஏமாற்றலாம் என்பதே அரசியல்வாதிகளின் நோக்கமாக உள்ளது. தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் 50 ஆண்டுகளாக மாறி, மாறி இதைத்தான் செய்து வருகிறது. தீய ஆட்சி முறையே தொடர வேண்டுமா? அல்லது தூய ஆட்சிமுறை வேண்டுமா? என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
நிரந்தர வெற்றி
நாட்டையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.  நாங்கள் தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க தயாராக இல்லை. யார் வந்தாலும் எதுவும் நடக்கப்போவதில்லை. எனவே இந்த பணமாவது கிடைக்கட்டும் என்கிற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
நாம் நோட்டை வாங்கிவிட்டு வாக்கை விற்கிறோம். அரசியல்வாதிகள் வாக்கை வாங்கிவிட்டு நாட்டை விற்கிறார்கள். ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது எதிர்காலத்தை தீர்மானிக்க உள்ள கடைசி ஆயுதமே வாக்கு தான். வாக்குப்பதிவு நாளுக்கும், வாக்கு எண்ணிக்கை நாளுக்கும் இடையேயான இடைவெளி சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இங்கே கூடி உள்ள நீங்கள், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து எங்களது வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும். இவ்வாறு சீமான் பேசினார்.
அதைத்தொடர்ந்து சேந்தமங்கலம் தொகுதி வேட்பாளர் ரோகிணி, பரமத்திவேலூர் தொகுதி வேட்பாளர் யுவராணி ஆகியோரையும் அறிமுகம் செய்து, சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
ராசிபுரம்
ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட்டில் ராசிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சிலம்பரசியை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆறுகள், குளங்கள் போன்றவற்றை பாதுகாத்து நம் சந்ததிகளுக்கு தர வேண்டும். இயற்கையின் போக்கில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். நஞ்சில்லா உணவு அதுவே நம் கனவு. மாற்றத்தை விரும்புபவர்கள் ஊழல், லஞ்சம் இல்லாத ஆட்சியை விரும்புபவர்கள், சிறந்த நிர்வாகத்தை விரும்புவார்கள், இலவசத்திற்காக கையேந்தாத பெருமை மிக்க வாழ்க்கையை விரும்புபவர்கள் சிறந்த கல்வி, மருத்துவம், குடிநீ்ர் போன்றவற்றை அனைவருக்கும் சரியாகவும் சமமாகவும் கிடைத்திட ராசிபுரம் சட்டசபை தொகுதி நாம் தமிழர் வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 
திருச்செங்கோடு
இதேபோல திருச்செங்கோடு தொகுதி வேட்பாளர் நடராஜன், குமாரபாளையம் தொகுதி வேட்பாளர் வருண் ஆகியோரை ஆதரித்து சீமான் திருச்செங்கோடு நெற்கத்தி மண்டபம் அருகே பிரசாரம் செய்தார்.

மேலும் செய்திகள்