தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்-சேலத்தில் டி.டி.வி.தினகரன் பேச்சு
மே மாதம் 2-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று சேலத்தில் நடந்த பிரசாரத்தில் டி.டி.வி.தினகரன் பேசினார்.
சேலம்:
மே மாதம் 2-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று சேலத்தில் நடந்த பிரசாரத்தில் டி.டி.வி.தினகரன் பேசினார்.
தேர்தல் பிரசாரம்
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
சேலம் மண்ணுக்கு சிலர் அவப்பெயர் ஏற்படுத்தி உள்ளார்கள். கடந்த 1989-ம் ஆண்டு மற்றும் 2011-ம் ஆண்டு, ஏன் 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் வரை அவர்களது சொத்து மதிப்பு என்ன? இப்போது அவர்கள் நிலை என்ன? பதவி கொடுத்தவரை மதித்தீர்களா? என்று உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் கேட்கிறார்கள். தவழ்ந்து ஊர்ந்து வந்து பதவி ஏற்றார்கள்.
மக்கள் வரிப்பணம்
சசிகலாவை கட்சியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று சொல்கிறார்கள். சசிகலாவுக்கும் அ.தி.மு.க.வுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூற அவர்கள் யார்? இந்த ஆட்சி டெண்டர் ஆட்சி. குழந்தை பிறப்பு முதல் சுடுகாடு வரை ஊழல் செய்து கொண்டு உள்ளார்கள். காண்டிராக்டர்களை சேர்த்து கட்சி நடத்துகிறார்கள்.
தினகரன் யார்? என்று கேட்கிறார்கள். என்னை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு தொப்பி சின்னத்திற்கு வாக்கு கேட்டீர்களா? இல்லையா? யாராக இருந்தாலும் மக்கள் வரிப்பணத்தை சுரண்டுபவர்கள் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்வது ராஜதந்திரியா?
விலைக்கு வாங்க முடியாது
பா.ஜனதாவுடன் கூட்டணி போட்டுக்கொண்டு தற்போது முழித்துக்கொண்டு இருக்கிறார்கள். எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் மக்களை விலைக்கு வாங்க முடியாது. பச்சை துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயிகளா? 8 வழிச்சாலை திட்டத்தால் தொழில் பெருகாது. கமிஷன் தான் பெருகும். தேர்தல் முடிந்ததும் மக்கள் மன்றத்தில் பதில் சொல்ல வேண்டும்.
இட ஒதுக்கீட்டை நம்பி பா.ம.க.வினர் மாட்டிகிட்டார்கள். 10½ சதவீதம் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வருமா? யாராவது கோர்ட்டில் வழக்கு போட்டால் முடிந்தது. பெயர் அளவில் அறிவித்து உள்ளார்கள். மே மாதம் 2-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தப்பி, தவறி தி.மு.க. ஆட்சிக்கு வந்து விடக்கூடாது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து விடும் என்று கூறுவது கண்கட்டி வித்தையாகும்.
துரோக ஆட்சியை அகற்ற மக்கள் முடிவு எடுத்து உள்ளார்கள். தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல, விவசாயம் செழிக்க, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் ஆட்சி அ.ம.மு.க. கூட்டணி தான். ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை கொண்டு வர மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு டி.டி.வி. தினகரன் பேசினார்.