எலாஸ்டிக் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன

நூல், ரப்பர் விலை உயர்வை கண்டித்து எலாஸ்டிக் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. முதல் நாளான நேற்று ரூ.4 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

Update: 2021-03-25 22:23 GMT
திருப்பூர்
நூல், ரப்பர் விலை உயர்வை கண்டித்து எலாஸ்டிக் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. முதல் நாளான நேற்று ரூ.4 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
உற்பத்தி நிறுத்த போராட்டம் 
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருளாக எலாஸ்டிக் இருந்து வருகிறது. அனைத்து பின்னலாடைகளிலும் எலாஸ்டிக்கின் பங்கு இன்றிமையாததாக இருக்கிறது.
இந்த நிலையில் நூல், ரப்பர், லைக்ராவின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக எலாஸ்டிக் உற்பத்தி செலவு அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரப்பர் ரூ.180-ஆக இருந்தது. ஆனால் தற்போது ரூ.350-ஆக உள்ளது. 100 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இதுபோல் லைக்ரா ரூ.400-ல் இருந்து ரூ.750 வரை உயர்ந்துள்ளது. பாலியஸ்டர் நூல் ரூ.80-ல் இருந்து ரூ.125-ஆக உயர்ந்துள்ளது. இதனால் ரப்பர், நூல், லைக்ரா விலை உயர்வை கண்டித்து திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தினர் நேற்று உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநகர் பகுதிகளில் உள்ள 300-க்கும் மேற்பட்ட எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்றன. இதனால் தொழிலாளர்கள் இன்றி அந்த நிறுவனங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
ரூ.4 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு 
இது குறித்து திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க தலைவர் கோவிந்தசாமி கூறியதாவது
எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்கள் மூலப்பொருட்களின் விலை உயர்வால் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இதன் காரணமாக தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வை அறிவித்தும், நூல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்வை பனியன் உற்பத்தியாளர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக அடையாளமாக உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இந்த போராட்டம் யாருக்கும் எதிரானது அல்ல. தொழிலில் உள்ள சூழலை தெரியப்படுத்தும் விதமாக போராட்டம் நடக்கிறது. இதன் காரணமாக ஒரு நாளுக்கு ஒன்றரை கோடி மீட்டர் எலாஸ்டிக் உற்பத்தி பாதிக்கப்படும். இதுபோல் ஒரு நாளுக்கு ரூ.4 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்படும். நாளை (இன்று) 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்