அ.தி.மு.க. ஆட்சியை மாற்ற தமிழக வாக்காளர்கள் தயாராகி விட்டனர்; ஈரோட்டில் கி.வீரமணி பேச்சு
அ.தி.மு.க. ஆட்சியை மாற்ற தமிழக வாக்காளர்கள் தயாராகி விட்டனர் என்று ஈரோட்டில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.
ஈரோடு
அ.தி.மு.க. ஆட்சியை மாற்ற தமிழக வாக்காளர்கள் தயாராகி விட்டனர் என்று ஈரோட்டில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.
ஆட்சி மாற்றம்
தி.மு.க. கூட்டணியில் உள்ள தி.மு.க. வேட்பாளர் சு.முத்துசாமி (ஈரோடு மேற்கு), காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவேரா (ஈரோடு கிழக்கு) ஆகியோருக்கு உதயசூரியன் மற்றும் கை சின்னத்தில் வாக்கு கேட்டு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று ஈரோட்டில் பிரசாரம் மேற்கொண்டார்.
திராவிடர் கழகம் சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-
இந்த தேர்தலுக்கும், இதுவரை நடந்த தேர்தலுக்கும் மிகப்பெரிய தனித்துவம் உண்டு. இதுவரை நடந்த தேர்தல்களில் தேர்தல் அறிவிக்கப்படும். கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வார்கள். வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பார்கள். பின்னர் வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வரச்செய்து ஓட்டு போட வைப்பார்கள்.
ஆனால், இந்த தேர்தல் தலைகீழாக உள்ளது. வாக்காளர்கள் மாற்றத்துக்கு ஏற்கனவே தயாராகி விட்டார்கள். அ.தி.மு.க. ஆட்சியை மாற்ற வாக்காளர்கள் தயாராகி விட்டார்கள். மாற்றம் ஒன்றே மாறாதது.
ஸ்டாலின்தான் வாராரு...
தி.மு.க. கூட்டணி கொள்கை கூட்டணி. கொள்கைக்காக, காவிரி பிரச்சினை, நீட் தேர்வு, சமூக நீதி, பெண்கள் பாதுகாப்பு என்று பல்வேறு விஷயங்களுக்கான நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே ஒன்றிணைந்த கூட்டணி. இன்று தமிழகம் முழுவதும் ஸ்டாலின்தான் வாராரு... விடியல் தர போறாரு என்று மக்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
மீட்கப்போவது தமிழ்நாட்டை மட்டுமல்ல. அ.தி.மு.க.வையும் மீட்கப்போகிறது இந்த தேர்தல். பா.ஜனதாவிடம் அ.தி.மு.க. அடகு வைக்கப்பட்டு அடிமை சாசனம் எழுதப்பட்டு உள்ள அ.தி.மு.க.வை தேர்தல் தோல்வி மீட்கும்.
எனவே அ.தி.மு.க.வினரும் தங்கள் கட்சியை மீட்க, தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
ஏன் என்றால் 20 இடங்களில் போட்டியிடும் பா.ஜனதா வெற்றி பெற்றால் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என்று அமித்ஷா கூறி உள்ளார்.
ஏற்கனவே தமிழகத்தில் ஒரு சீட்கூட இல்லாமல் மத்திய அரசின் திட்டங்களை மறுப்பு இல்லாமல் நிறைவேற்றும் அரசாக அ.தி.மு.க. உள்ளது.
இந்த தேர்தலில் ஸ்டாலின் அலை வீசுகிறது. பா.ஜனதா அடிமையாக இருக்கும் தமிழக அரசு மாநில சுயாட்சி, மாநில உரிமையை விட்டுக்கொடுத்து உள்ளது.
நீட் தேர்வு ரத்து செய்ய முடியவில்லை. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வால் மக்கள் சிரமப்படுகிறார்கள்.
எந்த துறையிலும் வளர்ச்சி இல்லை. 7 பேர் விடுதலை விவகாரத்தில் சரியாக செயல்படவில்லை. ஜெயலலிதா சரக்கு மற்றும் சேவை வரியை ஒத்துக்கொள்ளவில்லை. உதய் மின்சார திட்டத்தை ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கு எல்லாம் முடிவு கட்ட ஏப்ரல் 6-ந் தேதி மறந்து விடாதீர்கள்.
இவ்வாறு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.