அ.தி.மு.க.- தி.மு.க. வெற்றி என்பது ஒரு சாதாரண நிகழ்வு: நாம் தமிழர் கட்சியின் வெற்றி சரித்திர மாற்றத்தை ஏற்படுத்தும்; ஈரோட்டில் சீமான் பேச்சு
அ.தி.மு.க.-தி.மு.க. கட்சிகளின் வெற்றி என்பது ஒரு சாதாரண நிகழ்வு என்றும், நாம் தமிழர் கட்சியின் வெற்றி மட்டுமே சரித்திர மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் ஈரோட்டில் சீமான் கூறினார்.
ஈரோடு
அ.தி.மு.க.-தி.மு.க. கட்சிகளின் வெற்றி என்பது ஒரு சாதாரண நிகழ்வு என்றும், நாம் தமிழர் கட்சியின் வெற்றி மட்டுமே சரித்திர மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் ஈரோட்டில் சீமான் கூறினார்.
சீமான் பிரசாரம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்த வேட்பாளர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு கேட்டு அனைத்து பகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்து வருகிறார்.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று வாக்கு சேகரித்தார். நேற்று மதியம் 2.30 மணி அளவில் ஈரோடு சோலார் பகுதிக்கு வந்த அவர் மொடக்குறிச்சி, ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து விவசாயி சின்னத்துக்கு வாக்கு கேட்டு பேசினார்.
தனித்து போட்டி
அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் என்பது வெற்றியை மட்டும் கொண்டது அல்ல. கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பதுதான் முதன்மையான வெற்றி. நாம் யாரோடும் கூட்டணி சேராமல் தனித்து நின்று தேர்தலை சந்திக்கிறோம். இந்த நோக்கத்துக்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் தொடர்ந்து தேர்தலை சந்தித்து வருகிறோம். 2016-ம் ஆண்டு 1.1 சதவீதம் வாக்குகளை நீங்கள் கொடுத்தீர்கள். 2019-ம் ஆண்டு 17 லட்சம் வாக்குகளை தந்து எங்களுக்கு பெரிய நம்பிக்கையை விதைத்தீர்கள். அதே உற்சாகத்தோடு 2021 தேர்தலில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சரி சம இட ஒதுக்கீடு செய்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறோம்.
தமிழ் படித்தால் வேலை
உங்கள் பிள்ளைகளாகிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். ஏதோ 4 அல்லது 10 சீட்டுகளை கூட்டணியில் வாங்கி, மேஜையை தட்டுவதில் எந்த பயனும் இல்லை. ஒட்டுமொத்தமாக வென்று அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் அனைத்தும் தமிழர்களிடம் வரவேண்டும்.
தமிழ் படித்தால் மட்டுமே தமிழ்நாட்டில் வேலை என்ற நிலை உருவாகும். அரசு பள்ளிக்கூடங்களின் தரம் உயரும். அரசின் அனைத்து துறையினரின் குழந்தைகளும் அரசு பள்ளிக்கூடம், கல்லூரியில் படிக்க வேண்டும். அப்படி படிக்க வைக்காதவர்களின் சம்பளத்தில் பாதி துண்டிக்கப்படும். முதல்-அமைச்சர் முதல் அனைத்து அரசுத்துறையினரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும். இல்லை என்றால் சம்பளம் பாதியாக துண்டிக்கப்படும். இந்த நிலை எல்லாம் நாம் தமிழர் ஆட்சி பொறுப்பு ஏற்ற ஒரே நொடியில் மாற்றப்படும்.
இலவசம் கிடையாது
இப்போது யாரும் தாய் மொழியில் கையெழுத்து போடுவதில்லை. பெயரின் முதல் எழுத்தான தந்தை பெயரைக்கூட தமிழில் எழுத முடியாதவர்களாக இருக்கிறோம்.
அனைவருக்கும் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும். இலவசம் கிடையாது. விவசாயத்துக்கு அரசு ஊதியம் வழங்கும். உற்பத்தி பொருட்களை அரசே விற்றுக்கொள்ளும்.
தமிழ்நாட்டில் குவிந்து இருக்கும் வடமாநிலத்தவர்கள் அனைவரும் நாம் தமிழர் ஆட்சி அமைந்ததும் பெட்டி படுக்கையை தூக்கிக்கொண்டு அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு சென்று விடுவார்கள். இப்போது 1½ கோடிபேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவர்களில் 20 லட்சம்பேர் வாக்கு உரிமை பெற்று இருக்கிறார்கள். அரசியல் விடுதலை, ஜனநாயக புரட்சி பெற வேண்டும் என்றால் விவசாயி சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.
வரலாறு
அ.தி.மு.க.-தி.மு.க. வெற்றி பெறுவது என்பது ஒரு சாதாரண நிகழ்வு. அது அடிக்கடி நடந்து வந்து இருக்கிறது. ஆனால் நாம் தமிழர் கட்சியின் வெற்றி என்பது வரலாறு. மாற்றத்தை விரும்பும் மக்களின் பெருங்கனவுக்கான வெற்றி.
இவ்வாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். பேசி முடித்தபின்னர் கட்சிதொண்டர் ஒருவரின் பெண் குழந்தைக்கு அங்கயற்கண்ணி என்றும், இன்னொரு தொண்டரின் மகனுக்கு ராவணபெருந்தகை என்றும் பெயர் சூட்டினார்.
பின்னர் கவுந்தப்பாடி, கோபி பகுதிகளிலும் அவர் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.