கோவளத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் வராது: டெண்டர் அறிவிப்பை தூத்துக்குடி துறைமுகம் ரத்து செய்துவிட்டது - தளவாய்சுந்தரம் தகவல்

கோவளத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் வராது என்றும், டெண்டர் அறிவிப்பை தூத்துக்குடி துறைமுகம் ரத்து செய்து விட்டது எனவும் கன்னியாகுமரி சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தளவாய்சுந்தரம் கூறினார்.

Update: 2021-03-25 19:57 GMT
நாகர்கோவில்,

கன்னியாகுமரி சட்டசபை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் தளவாய்சுந்தரம் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதாவை போல முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் திட்டம் தீட்டியுள்ளார். குறிப்பாக கல்வியில் அரசு பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. 

பிரசாரத்துக்காக எங்கு சென்றாலும் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தான் வரவேண்டும் என்று மக்கள் கூறுகிறார்கள். மத்திய அரசு மூலமாக ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக்கல்லூரி பெற்றுள்ளோம். அவற்றின் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

கன்னியாகுமரி துறைமுக திட்டத்துக்காக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும், தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் தடையில்லா சான்றிதழ் வழங்கவில்லை. சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் டெண்டர் எடுக்க விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி துறைமுகம் சார்பில் அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் டெண்டர் தொடர்பான அறிவிப்பை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் ரத்து செய்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு கடிதம் வந்துள்ளது. எனவே கோவளத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் வராது. மக்களுக்கு விரோதமான திட்டங்களுக்கு எதிராக நாங்கள் மத்திய அரசிடம் குரல் கொடுப்போம். ஆனால் துறைமுகத்தை வைத்து எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதனால் மக்களின் வாக்கு வங்கிகளை பெறலாம் என நினைக்கிறார்கள். குமரி மாவட்ட மீனவ மக்களை பாதிக்கும் திட்டங்களை கொண்டு வரமாட்டோம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. மீனவ மக்களை பாதிக்கும் வகையில் எந்த திட்டமும் கொண்டு வரமாட்டோம். 
இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது சரக்கு பெட்டக துறைமுகத்துக்கான டெண்டர் அறிவிப்பை ரத்து செய்து தூத்துக்குடி துறைமுகம் குமரி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் நகலை தளவாய்சுந்தரம் பத்திரிகையாளர்களிடம் காண்பித்தார்.

அ.தி.மு.க. வேட்பாளர் என்.தளவாய்சுந்தரம் தோவாளை ஒன்றியத்தில் நேற்று காட்டுப்புதூரில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். கடுக்கரை, திடல், தெரிசனங்கோப்பு ஆகிய பஞ்சாயத்து பகுதிகளிலும் அழகியபாண்டியபுரம், பூதப்பாண்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளிலும் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில் வீதி-வீதியாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

காட்டுப்புதூரில் ஒரு மூதாட்டி வாங்கய்யா வாத்தியார் அய்யா... என்று பாட்டுப்பாடி தளவாய்சுந்தரத்தை வரவேற்றார். அவர் அங்கு கூடியிருந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார்.

மேலும் செய்திகள்