காரில் கொண்டு சென்ற ரூ.23 லட்சம் பறிமுதல்
கருங்கல் அருகே பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.23 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகர்கோவில்,
கருங்கல் அருகே பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.23 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
வாகன சோதனை
குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் வாக்குப்பதிவு வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதனையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை வினியோகிப்பதை தடுக்க 18 பறக்கும்படை குழுக்கள், 6 தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் 3 கட்டமாக சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், குளச்சல் பறக்கும் படை தாசில்தார் நடேசன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரதீப் குமார், போலீசார் விவேகானந்தன், ஜஸ்டின்ராஜ் ஆகியோர் நேற்று கருங்கல் அருகே செல்லங்கோணம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
ரூ.23 லட்சம் பறிமுதல்
காரில் ரூ.23 லட்சம் இருந்தது. காரில் இருந்தவர்களிடன் விசாரணை நடத்திய போது அந்த பணம் நகை கடைக்கு சொந்தமானது என தெரிவித்தனர். பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அதிகாரிகள் ரூ.23 லட்சத்தை பறிமுதல் செய்து தக்கலை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மேல்புறம்
தேர்தல் பறக்கும் படையினர் மேல்புறம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளில் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரூ.70 ஆயிரத்தை பறிமுதல் செய்து விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.