பறக்கும் படை குழுவை கண்டித்த தேர்தல் செலவின பார்வையாளர்
வாகன சோதனை நடத்தாத பறக்கும் படை குழுவை தேர்தல் செலவின பார்வையாளர் கண்டித்தார்.
வால்பாறை,
பொள்ளாச்சி-வால்பாறை ரோட்டில் பறக்கும் படையினரின் செயல்பாடுகள் குறித்து தேர்தல் செலவின பார்வையாளர் ராம்கிருஷ்ணா பேடியா திடீரென ஆய்வு செய்தார். மேலும் எஸ்டேட் பகுதிகளில் அரசியல் கட்சியினர் பிரசாரம் மேற்கொள்ளுதல், அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் எண்ணிகையை பார்வையிட்டார்.
அப்போது வால்பாறை நகரில் சாலையோரம் ஒரு பறக்கும் படை குழுவின் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
மேலும் அந்த குழுவினர் அந்த வழியாக செல்லும் வாகனங்களை சோதனை செய்யாமலும் இருந்தனர். இதை கண்ட தேர்தல் செலவின பார்வையாளர் ராம்கிருஷ்ணா பேடியா, அந்த குழுவினரை அழைத்து கண்டித்தார். மேலும் அவர்கள் வாகன சோதனை செய்த விவரங்களை பதிவு செய்து வைத்திருக்கும் ஆவணங்களை வாங்கி பார்வையிட்டார்.
பின்னர் எனது வாகனம் உள்பட அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும், எந்த அளவுக்கு சோதனையை தீவிரப்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு தேர்தல் நியாயமான முறையில் நடைபெறும் என்ற நம்பிக்கை மக்களுக்கு பிறக்கும் என்று அறிவுரை வழங்கினார்.