மேல்மலையனூர் அருகே தடையில்லாமல் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
மேல்மலையனூர் அருகே தடையில்லாமல் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனா்.
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் அருகே தாயனூர் கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சுமார் 15 நாட்களுக்கு மேல் குடிநீர் வரவில்லை என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தடையில்லாமல் குடிநீர் வழங்கக்கோரி மேல்மலையனூர்- அவலூர்பேட்டை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அவலூர்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது குடிநீர் பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.