அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி பா.ஜனதா எதிர்க்கட்சியாகும் தொல்.திருமாவளவன் ஆரூடம்

சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி பா.ஜனதா எதிர்க்கட்சியாகும் என்று விழுப்புரத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசினார்.

Update: 2021-03-25 17:05 GMT
விழுப்புரம், 


விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் லட்சுமணனை ஆதரித்து நேற்று விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., தேர்தல் பிரசாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். 
அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்ற நிலை இன்றைக்கு நிலவுகிறது. 
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பா.ஜ.க. இழுத்த இழுப்புக்கு எல்லாம் ஆட்டம் போடுபவர்களாக செயல்பட்டனர். தமிழக மக்கள், ஜெயலலிதாவை நம்பியே வாக்களித்தனர்.

 ஆனால் அவரது மறைவுக்கு பிறகு வெளிப்படையாகவே பா.ஜ.க.தான் தமிழகத்தை ஆண்டது. மோடியும், அமித்ஷாவும்தான் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் போன்று அதிகாரம் செய்தனர்.

கூட்டணி கட்சிகளை அழிக்கும் 

மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை, அதற்கான அறிகுறியே இல்லை. அ.தி.மு.க.வே வெற்றி பெறாது என்றால் அவர்களுடன் கூட்டணியில் உள்ள பா.ஜ.க., பா.ம.க.வின் நிலை என்னவாகும்? இவர்கள் மக்களின் மிகப்பெரிய வெறுப்பை சம்பாதித்துள்ளனர்.
இந்த தேர்தல் முடிந்த பிறகு அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது. அ.தி.மு.க.வை பா.ஜ.க. கட்சியே விழுங்கி விடும். அது பா.ஜ.க.வின் புத்தி. கூட்டணி கட்சிகளை முதலில் அழிப்பதுதான் அவர்களது வரலாறு. அதற்கு பீகார், அருணாசல பிரதேச மாநிலங்களை உதாரணங்களாக கூறலாம். 

பா.ஜனதா எதிர்க்கட்சி

பா.ஜ.க.வின் நோக்கம் தி.மு.க., அ.தி.மு.க.வை அழித்துவிட்டு தமிழகத்தில் காலூன்ற பார்க்கிறது. அவர்கள் தி.மு.க.விடம் வாலாட்ட முடியாது. இந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆளும்கட்சியாகும், பா.ஜ.க. எதிர்க்கட்சியாகும். அவர்கள் 20 தொகுதிகளில் தானே போட்டியிடுகிறார்கள், எப்படி எதிர்க்கட்சியாக முடியும் என்று கேட்கலாம். அ.தி.மு.க.வில் வெற்றி பெறும் ஒவ்வொருவரும் பா.ஜ.க.வின் உறுப்பினர்கள். அவர்களை பா.ஜ.க.வினர் விலைக்கு வாங்கி விடுவார்கள். அ.தி.மு.க.வை இந்த தேர்தலில் அழித்து விட்டு பா.ஜ.க. 2-வது கட்சியாக மாறும். எடப்பாடி பழனிசாமியே தன்னை தற்காத்துக் கொள்வதற்காக பா.ஜ.க.வில் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மதவாத அரசியல்

தமிழகத்தில் மதவாத அரசியலை பா.ஜ.க.வினர் திணிக்க பார்க்கிறார்கள்.  இங்கு பா.ஜ.க. வலிமை பெற்றால் தமிழகத்தின் நிலை என்னவாகும் என்று சிந்தித்து பாருங்கள். அவர்கள் தமிழகத்தில் காலூன்ற விடாமல் தடுக்கவே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஸ்டாலின் உருவாக்கியுள்ளார்.
தமிழக மண்ணை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு மட்டுமல்ல, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் உள்ளது. எங்களுக்கு இடம் குறைந்தது பிரச்சினை இல்லை, பாசிச அரசியல் செய்யும் பா.ஜ.க.வுக்கு இடம் கொடுப்பதா, வேண்டாமா என்பதுதான் பிரச்சினை. சமூகநீதியையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கவும், சனாதன கும்பலை வேறூன்ற விடாமல் அழிக்கவும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு அளியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

விக்கிரவாண்டி- வானூர்

இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்தும், வானூர் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வன்னிஅரசுவை ஆதரித்து வானூர், கண்டமங்கலம் பகுதிகளிலும் தொல்.திருமாவளவன் எம்.பி. பிரசாரம் மேற்கொண்டார்.

மேலும் செய்திகள்