தூத்துக்குடியில் கூடுதல் வாக்குச்சீட்டு எந்திரங்கள் பரிசோதனை கலெக்டர், தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு
தூத்துக்குடியில் கூடுதல் வாக்குச்சீட்டு எந்திரங்கள் பரிசோதனை செய்யப்பட்டது. இதை கலெக்டர், தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கூடுதல் வாக்குச்சீட்டு எந்திரங்கள் பரிசோதனை செய்யும் பணியை மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.
வாக்குச்சீட்டு எந்திரங்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் 16-க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் 2 வாக்குச்சீட்டு எந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன. ஆகையால் கூடுதலாக 1736 வாக்குச்சீட்டு எந்திரங்கள் தேவையாக உள்ளது. இதனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டு எந்திரங்களை பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது. அதன்படி தூத்துக்குடி சிவில் சப்ளை கிட்டங்கியில் இருந்த 1736 வாக்குச்சீட்டு எந்திரங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த எந்திரங்கள் புதுக்கோட்டையில் உள்ள தூத்துக்குடி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் வைத்து பரிசோதனை செய்யும் பணி நேற்று நடந்தது. பெல் நிறுவன என்ஜினீயர்கள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆய்வு
இதனை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ், தேர்தல் பொது பார்வையாளர்கள் ஜுஜவரப்பு பாலாஜி (தூத்துக்குடி), அஸ்வானி குமார் சௌதாரி, (விளாத்திகுளம், கோவில்பட்டி), அனில் குமார்ரூபவ் (ஓட்டப்பிடாரம்), சுஷில் குமார் படேல் (திருச்செந்தூர்), சவின் பன்சால்ரூபவ் (ஸ்ரீவைகுண்டம்) ஆகியோர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குச்சீட்டு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை திறந்து வாக்குச்சீட்டு எந்திரங்கள் முதல் கட்ட பரிசோதனை செய்யப்படுவதை ஆய்வு செய்தனர்.
இந்த பரிசோதனை பணிகள் முடிக்கப்பட்ட பிறகு, வாக்குச்சீட்டு எந்திரங்கள் சுழற்சி முறையில் அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
ஆய்வின் போது, இஸ்ரோ நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர், மின்னனு வாக்குப்பதிவு எந்திர ஒருங்கிணைப்பு அலுவலர் செல்வராஜ் ரூபவ், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் பரிமளா, பெல் நிறுவன என்ஜினீயர்கள் அமன்சிங்ரூபவ், கவுதம், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.