முசிறி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்; அ.தி.மு.க வேட்பாளர் எம்.செல்வராசு எம்.எல்.ஏ. வாக்குறுதி

முசிறி தொகுதி அ.தி.மு.க வேட்பாளரும், அம்மா பேரவை மாநில இணைச்செயலாளருமான எம்.செல்வராசு எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுடன் கிராமம், கிராமமாக சென்று மக்களை சந்தித்து தீவிர பிரசாரம் செய்து வாக்குகள் சேகரித்து வருகிறார்.

Update: 2021-03-25 05:30 GMT
அ.தி.மு.க. வேட்பாளர் எம்.செல்வராசு எம்.எல்.ஏ. துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்த காட்சி
நேற்று உமையாள்புரம், செவந்தலிங்கபுரம், தண்டலைபுத்தூர், முசிறி நடராஜநகர், மலையப்பபுரம், வடுகப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி, வீதியாக சென்று அவர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். முன்னதாக முசிறியில் வாரசந்தைக்கு சென்ற அவர் அங்கிருந்த காய்கறி வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோரிடம் தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரங்கள் வழங்கி இரட்டை இலைக்கு வாக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதனைதொடர்ந்து திறந்த ஜீப்பில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்த வேட்பாளர் எம்.செல்வராசு, கடந்த 5 ஆண்டுகளில் முசிறி தொகுதி மக்களின் நலனுக்காக பாடுபட்டு உள்ளேன். முசிறியை நகராட்சியாக தரம் உயர்த்துவது, முசிறி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு தொழிற்சாலைகள் அமைப்பது, அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லூரி கொண்டுவருவது, பாசன வாய்க்கால்களை தூர்வாரி சீரமைப்பது, பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பணிகளை வரும் காலங்களில் உங்களுக்காக நிறைவேற்றித்தர காத்திருக்கிறேன். முதல்-அமைச்சர் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் 
அனைத்தும் செயல்படுத்தி காட்டுவேன். மேலும் முசிறி தொகுதியிலுள்ள அய்யாற்று வாய்க்காலை சீரமைத்து முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்வேன். நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை மீண்டும் எம்.எல்.ஏ. பதவியில் அமர்த்தவேண்டும் என்று பேசினார்.

அப்போது முன்னாள் எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ் எம்.தங்கவேல், ரத்தினவேல், மல்லிகா, மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ராஜமாணிக்கம், ஜெயம், பால்மணி, நகரசெயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் பேரூராட்சி தலைவர் மாணிக்கம், நிர்வாகிகள் ஜெயசீலன், பாரதிராஜா, வீரக்குமார், விமல்ராஜ், சத்யராஜா, கார்த்திக் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்