போடி தொகுதியில் தீவிர பிரசாரம்: “தமிழகத்தில் நல்லாட்சி தொடர அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்”; ப.ரவீந்திரநாத் எம்.பி. பேச்சு
தமிழகத்தில் நல்லாட்சி தொடர அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று போடியில் தேர்தல் பிரசாரத்தில் ப.ரவீந்திரநாத் எம்.பி. தெரிவித்தார்.
ஓ.பன்னீர்செல்வத்துக்காக பிரசாரம்
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை முதல்அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அவருக்காக தொகுதியில் அ.தி.மு.க.வினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாக்குசேகரித்து, அவருடைய மகனும், தேனி எம்.பி.யுமான ப.ரவீந்திரநாத் போடி நகரில் நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். போடியில் சாலை காளியம்மன் கோவிலில் கூட்டணி கட்சியினருடன் வழிபாடு நடத்திய பின்பு தனது பிரசாரத்தை தொடங்கினார். காமராஜர் சிலை, கருப்பசாமி கோவில் முன்பு, வ.உ.சி. சிலை, வள்ளுவர் சிலை, கட்டபொம்மன் சிலை, புதுக்காலனி, தேவர் சிலை ஆகிய இடங்களில் திரண்டு நின்ற மக்கள் மத்தியில் அவர் பிரசாரம் செய்தார். அ.தி.மு.க. வேட்பாளராக
போட்டியிடும் துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாக்குசேகரித்து பேசினார்.
தமிழகத்தில் நல்லாட்சி
பிரசாரத்தின் போது ப.ரவீந்திரநாத் எம்.பி. பேசியதாவது:
தமிழகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற இருபெரும் தலைவர்கள் பொற்கால ஆட்சி நடத்தினார்கள். அவர்களை தொடர்ந்து முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்& அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வருகிறார்கள். இந்த நல்லாட்சி தொடர அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தில் மக்கள் வாக்களிக்க வேண்டும். போடி தொகுதியில் துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். கல்வி வளர்ச்சியில் முன்னோடி தொகுதியாக போடியை மாற்றி உள்ளார். இந்த தொகுதியில் அரசு பொறியியல் கல்லூரி, சட்டக்கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பாலிடெக்னிக் கல்லூரி, ஐ.டி.ஐ. போன்ற கல்வி நிறுவனங்களை கொண்டு வந்துள்ளார்.
வாஷிங் மெஷின்
தமிழக மக்களுக்கு அ.தி.மு.க. ஆட்சிக் காலம் தான் பொற்காலம். அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்காக 17 வகையான நலத்திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்தார். அந்த திட்டங்கள் அனைத்தும் மக்களின் கரங்களில் சென்றடைந்தன. பெண்களின் பணிச்சுமை குறைக்க விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டது. இந்த முறையும் தேர்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் உள்ளன. அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வாஷிங் மெஷின் நிச்சயம் வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். அம்மா குலவிளக்கு திட்டத்தின் கீழ் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும். ஏழை, எளிய மக்களுக்கு ஆண்டுக்கு 6 விலையில்லா சிலிண்டர்கள் வழங்கப்படும். இந்த நல்லாட்சி தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பிரசாரத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர் பழனிராஜ், பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாண்டியன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், பா.ஜனதா, பா.ம.க., பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.