வீதி, வீதியாக தீவிர பிரசாரம்: சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த சைதை துரைசாமி
சென்னை சைதாப்பேட்டையில் தேர்தல் பிரசாரத்தின் போது, அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்தார்.
சென்னை,
சென்னை சைதாப்பேட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி களமிறங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை ஜோதி அம்மாள் நகரில் சைதை துரைசாமி நேற்று மாலை பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக அப்பகுதியில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு தனது பிரசாரத்தை அவர் தொடங்கினார். அவருக்கு ஆதரவாக பா.ம.க., பா.ஜ.க., த.மா.கா. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர்.
சிலம்பம்
சைதாப்பேட்டை ஜோதி அம்மாள் நகரில் பிரசாரம் மேற்கொண்ட சைதை துரைசாமியை ஆரத்தி எடுத்தும், பூசணிக்காய்-தேங்காய் உடைத்து திருஷ்டி கழித்தும், மலர்கள் தூவியும் வரவேற்றனர்.
இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிறுமிகள் சிலர் சிலம்பம் ஆடி அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது திடீரென ஒரு சிறுமியிடம் இருந்து கம்பை வாங்கி சைதை துரைசாமி சிலம்பம் சுற்றத் தொடங்கினார். மேலும் ஒரு சிறுமியுடன் சிலம்ப சண்டையிலும் ஈடுபட்டார். இதனை பார்த்த அப்பகுதியினர் ஆரவாரத்தில் கைதட்டி மகிழ்ந்தனர். அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. தொண்டர் ஒருவரின் பெண் குழந்தைக்கு ‘வெற்றிச்செல்வி' என பெயர் சூட்டினார்.
தேர்தல் பிரசாரத்தின் போது ‘கொரோனா காலம் என்பதால் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து கொள்ளுங்கள்' என அன்புடன் வேண்டுகோளும் விடுத்தார்.
தொகுதி முழுவதும் சேவைகள்
முன்னதாக சைதை துரைசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த ஜோதியம்மாள் நகரை உருவாக்கியதே நான்தான். பட்டா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இங்கு குடியிருப்பது கேள்விக்குறி எனும் நிலையில் மக்கள் இருந்தபோது, இந்த இடத்தை நல்லபடியாக அவர்களுக்கு ஒதுக்கி பட்டா உள்ளிட்ட எல்லாத் தேவைகளையும் செய்து தந்தேன். இதுபோல சைதாப்பேட்டை தொகுதி முழுவதும் எனது சேவைகள் நிறைந்து உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.