அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை விளக்கி வேதாரண்யம் வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் தீவிர வாக்குசேகரிப்பு
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை விளக்கி வேதாரண்யம் வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கிராமங்களில் அவர் வீடு, வீடாக சென்று இரட்டை இலைக்கு ஆதரவு கேட்டார்.
கிராமங்களில் சுற்றுப்பயணம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் போட்டியிடுகிறார். இவர் கிராம பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை நேரில் சந்தித்து அரசின் சாதனைகளை விளக்கி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விலையில்லா வாஷிங் மெஷின், முதியோர் உதவித்தொகை உயர்வு, ஆட்டோ வாங்குவதற்கு ரூ.25 ஆயிரம் மானியம், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என்பன போன்ற நலத்திட்டங்கள் குறித்து ஓ.எஸ்.மணியன் கிராம மக்களிடம் விளக்கி
அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தரும்படி வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
தொண்டர்கள் உற்சாகம்
வேதாரண்யம் ஒன்றியம் மற்றும் தலைஞாயிறு ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் நேற்று வீடுவீடாக சென்ற அமைச்சர், இரட்டை இலைக்கு ஆதரவு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஓ.எஸ்.மணியனுக்கு வழிநெடுகிலும் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வேதாரண்யம் ஒன்றிய செயலாளர்கள் கிரிதரன், சுப்பையன், நகர செயலாளர் நமச்சிவாயம், தலைஞாயிறு ஒன்றிய செயலாளர்கள் அவை பாலசுப்பிரமணியன், சவுரிராஜன், பேரூர் செயலாளர் பிச்சையன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
துண்டு பிரசுரங்கள் வினியோகம்
பிரசாரத்தின்போது வேதாரண்யம் தொகுதியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்த சாதனைகள் பட்டியலிடப்பட்ட துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. அ.தி.மு.க. தொண்டர்களும் தொடர்ந்து வேதாரண்யம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர களப்பணியாற்றி வருகிறார்கள்.