ஆவடி என்ஜின் பேக்டரி கேட் பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.பாண்டியராஜன் வாக்கு சேகரிப்பு
ஆவடி என்ஜின் பேக்டரி கேட் பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.பாண்டியராஜன் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஆவடி, ராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தி மையமாக உருவாக்கப்படும் என்று உறுதியளித்தார்.
சென்னை,
அ.தி.மு.க. சார்பில் ஆவடி தொகுதியில் அமைச்சர் கே.பாண்டியராஜன் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் கடந்த சில நாட்களாக ஆவடி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நடைபயிற்சி சென்றவாறும் இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
நேற்று காலையில் என்ஜின் பேக்டரி ஒர்க் கேட் பகுதியில் கே.பாண்டியராஜன் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது, அந்த பகுதியில் உள்ள தொழிலாளர்கள் ஒவ்வொருவரிடமும் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
தொழிலாளர்களிடையே கே.பாண்டியராஜன் பேசியதாவது:-
ராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தி மையம்
மத்திய-மாநில அரசுகள் உதவிகளால் ஆவடி தொகுதி ராணுவ தளவாடங்கள் உதிரி பாகங்கள் தொழிற்சாலைகள் அதிகம் கொண்ட தொகுதியாக உள்ளது. இதில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்கள் அனைவருக்கும் அனைத்து திட்டங்களும் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஆவடி ராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தி மையமாக உருவாக்கப்படும்.
ஆவடி தொகுதியில் உள்ள ராணுவ தொழிற்சாலைகளில் உள்ள எட்டு சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் அதனைச்சார்ந்த தொழிலாளர்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது எங்களுக்கு மனப்பூர்வமான மகிழ்ச்சி. வரக்கூடிய நாட்களில் இந்த பகுதியில் ராணுவ தளவாட தகவல் தொழில்நுட்ப பூங்காவும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். மீண்டும் ஆவடி தொகுதியை அ.தி.மு.க.வின் கோட்டையாக மாற்றிட முழுமையான ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கே.பாண்டியராஜன் வாக்கு சேகரித்தபோது அ.தி.மு.க. நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.