திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவன மேலாளர் மனைவியிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு மர்ம நபர்கள் 3 பேருக்கு வலைவீச்சு

திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவன மேலாளரின் மனைவியிடம் 7 பவுன் சங்கிலி பறித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-03-25 00:56 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு முருகன் நகரை சேர்ந்தவர் சீலன் (வயது 35). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஏமாவதி (29).

இந்நிலையில் நேற்று முன்தினம் சீலன் தன் மனைவி ஏமாவதியை அழைத்துக்கொண்டு இரவு வேலையை முடித்துவிட்டு பூந்தமல்லியில் இருந்து தனது வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.

வேப்பம்பட்டு வரதாபுரம் அம்மன் பூங்கா அருகே வந்து கொண்டிருந்தபோது, பின்னால் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென சீலன் வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர்.

பின்னர், தாங்கள் வைத்திருந்த கத்தியால் சீலனின் தலையில் பலமாக தாக்கினார்கள். இதையடுத்து, அவர்கள் ஏமாவதி கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் காயமடைந்த சீலன் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து அவர் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்