சேலத்திற்கு தேர்தல் பணிக்கு வந்த பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி
சேலத்திற்கு தேர்தல் பணிக்கு வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
சேலத்திற்கு தேர்தல் பணிக்கு வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாதுகாப்பு படை வீரர்
ஒடிசா மாநிலம், தென்கனல் மாவட்டம், காமாஷ்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ரபிநாராயன் பூட்டியா. இவருடைய மகன் ஆசெஷ்குமார் பூட்டியா (வயது 31). இவர் சத்தீஷ்கார் மாநிலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் அங்கிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சேலத்திற்கு வந்தார்.
பின்னர் அவர் பறக்கும் படை குழுவினருடன் சேர்ந்து சேலத்தில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார். இவர் சேலம் லைன்மேட்டில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலை முடிந்து இரவு சமுதாய கூடத்திற்கு தூங்க சென்றார். நேற்று அதிகாலை 4 மணி அளவில் தூக்கத்தில் இருந்து விழித்த அவர் திடீரென்று தான் வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து தனது கழுத்தில் சுட்டு தற்கொலைக்கு முயன்றார்.
துப்பாக்கி சுடும் சத்தம்
இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் அவரது கழுத்து பகுதியில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதனால் வலியால் துடித்த அவர் மயங்கி கீழே விழுந்தார். இந்த நிலையில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் அவருடன் தங்கி இருந்த மற்ற வீரர்கள் திடுக்கிட்டு எழுந்து பார்த்தனர்.
அப்போது அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு வந்து ஆசெஷ்குமார் பூட்டியாவை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அவரது கழுத்து பகுதியில் இருந்த துப்பாக்கி குண்டை அகற்றினர்.
அதிகாரிகள் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்ததும், அவரது உயர் அதிகாரிகள் சம்பவம் நடந்த இடம் மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவருடன் தங்கி உள்ள பாதுகாப்பு படை வீரர்களுடன் தீவிர விசாரணை நடத்தினர். சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் விவரம் கேட்டு அறிந்தார்.
இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பணிச்சுமையால் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரபரப்பு
இந்த சம்பவம் தொடர்பாக தற்கொலைக்கு முயன்ற பாதுகாப்பு படை வீரரின் உறவினர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்து உள்ளனர். அவர்கள் சேலத்திற்கு விரைந்து வந்து கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற ஆசெஷ்குமார் பூட்டியாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
சேலத்திற்கு தேர்தல் பணிக்கு வந்த பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.