சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. விளங்குகிறது-துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. விளங்குகிறது என்று சேலத்தில் நடந்த பிரசாரத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
சேலம்:
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. விளங்குகிறது என்று சேலத்தில் நடந்த பிரசாரத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
துணை முதல்-அமைச்சர் பிரசாரம்
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை எடப்பாடி பஸ் நிறுத்தம் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், அ.திமு.க. வேட்பாளர்களான சுந்தரராஜன் (சங்ககிரி), மணி (ஓமலூர்) மற்றும் கூட்டணி கட்சியான பா.ம.க. சார்பில் மேட்டூரில் போட்டியிடும் வேட்பாளர் சதாசிவம் ஆகியோருக்கு வாக்கு சேகரித்து பேசியதாவது:-
செல்லாத கள்ளநோட்டு
2023-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் வீடற்று இருக்க கூடாது என்பதற்காக 12½ லட்சம் பேருக்கு தரமான, உறுதியான கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். அவர் மறைந்தாலும் இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இதுவரை தமிழகத்தில் 6½ லட்சம் பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பு அல்லது தனிநபர் வீடு கட்டி வழங்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டுக்குள் மற்றவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி காலத்தில் முதலீடு ரூ.45 ஆயிரம் கோடி தான். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.6 லட்சத்து 87 ஆயிரம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 19 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது. தி.மு.க. தேர்தல் அறிக்கை செல்லாத கள்ளநோட்டு ஆகும். ஆனால் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை செல்லக்கூடிய நல்ல நோட்டு ஆகும்.
உறுதியாக நிறைவேற்றப்படும்
தேர்தல் அறிக்கையில் கூறிய படி வாஷிங்மிசின், ஆண்டுக்கு 6 விலையில்லா கியாஸ் சிலிண்டர், திருமண உதவித்தொகை, முதியவர்கள், ஆதரவற்றோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு உறுதியாக நிறைவேற்றப்படும். நானும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் புள்ளி விவரங்களுடன் தான் பேசி வருகிறோம். பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்தவர் மு.க.ஸ்டாலின். பொய் சொல்லி ஆட்சிக்கு வரலாம் என்று அவர் நினைக்கிறார்.
அனால் அ.தி.மு.க. ஆட்சி தான் மீண்டும் மலர வேண்டும் என்று மக்கள் நினைத்து விட்டனர். தமிழக மக்கள் எந்த ஒரு நிலையிலும் தி.மு.க. ஆட்சியை வரவிட மாட்டார்கள் என்பது தான் உண்மை நிலை. தமிழகத்தில் 60 சதவீத விவசாயிகள் உள்ளனர். விவசாயிகளுக்கு மானியமாக உரம், விதை, தொழில் கருவிகள் வழங்கப்பட்டதன் மூலம் கடந்த 6 ஆண்டுகளாக நெல் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்ந்து விருதுகள் பெற்றுள்ளது.
பாதுகாப்பு அரணாக விளங்குகிறது
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசின் அரசாணையில் வெளியிடுவதற்கு குரல் கொடுக்காதவர் கருணாநிதி. ஆனால் 2011-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதாடி அரசாணையில் வெளியிட வைத்து பெற்று தந்தார். இலங்கை தமிழர்கள் போர் பிரச்சினையிலும் தி.மு.க., காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதும் பழைய திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றி நல்லாட்சி செய்து வருகிறார். சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. திகழ்ந்து விளங்குகிறது. அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறோம். மத்தியிலும் பா.ஜனதா சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நில அபகரிப்பு
அதைத்தொடர்ந்து சேலம் தாதகாப்பட்டியில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஜி.வெங்கடாஜலம் (சேலம் வடக்கு), பாலசுப்பிரமணியம் (சேலம் தெற்கு), ராஜமுத்து(வீரபாண்டி), சித்ரா (ஏற்காடு), ஜெயசங்கரன் (ஆத்தூர்), நல்லதம்பி (கெங்கவல்லி) மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் அருள் ஆகியோரை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசும் போது, ‘தி.மு.க. ஆட்சியின் போது ரூ.3,500 கோடி மதிப்பில் ஏழை மக்களை மிரட்டி அவர்களுடைய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கினர். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் அந்த நிலங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தோம். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் 435 பேர் மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். தேர்தலில் தீர்ப்பு வழங்கூடிய நீதிபதிகளாக விளங்கும் மக்கள் அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்’ என்றார்.
பிரசாரம் முடிவடைந்ததும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாநில கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.இளங்கோவன் சால்வை அணிவித்து கவுரவித்தார்.