திருச்சியில் தாரை தப்பட்டை முழங்க களை கட்டும் தேர்தல் பிரசார களம் நடனமாடி வாக்காளர்களை கவரும் கலைஞர்கள்

தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் திருச்சியில் கரகாட்டம், குத்தாட்டத்துடன் தேர்தல் பிரசாரம் களை கட்ட தொடங்கியது. வாக்காளர்களை நடனமாடி கலைஞர்கள் கவர்ந்து வருகிறார்கள்.

Update: 2021-03-24 21:22 GMT
திருச்சி, 
தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் திருச்சியில் கரகாட்டம், குத்தாட்டத்துடன் தேர்தல் பிரசாரம் களை கட்ட தொடங்கியது. வாக்காளர்களை நடனமாடி கலைஞர்கள் கவர்ந்து வருகிறார்கள்.

சூடு பிடிக்கும் தேர்தல் களம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தொகுதிகளில் வலம் வரும் வேட்பாளர்களை வரவேற்கும் வகையில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் ஆங்காங்கே கரகாட்டம், குத்தாட்டம் மற்றும் ஆடல்-பாடல் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வாக்காளர்களுக்கு கிளு, கிளுப்பை உண்டாக்கி வருகிறார்கள்.

மேலும் பட்டாசு மற்றும் வாணவேடிக்கை, வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுத்தல் என களை கட்ட தொடங்கியுள்ளது. திருச்சி மாவட்டத்திலும் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது. அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் அவற்றின் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், அ.ம.மு.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் சுட்டெரிக்கும் வெயிலிலும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குத்தாட்டம்

அதேபோன்று வேட்பாளர்களை வரவேற்று தாரை தப்பட்டை அடித்தும், பூரண கும்ப மரியாதை மற்றும் ஆரத்தி எடுத்தும் தடாலடி வரவேற்பும் நடந்து வருகிறது.

 இந்தநிலையில் திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு தொகுதியில் வேட்பாளர்கள் பிரசாரம் செய்யும் இடங்களில் வேட்பாளர்கள் வருகைக்கு முன்பாகவே சினிமா பாடல்களுக்கு குத்தாட்ட நிகழ்ச்சி களை கட்டியது.
அப்பகுதி மக்கள் அதை வேடிக்கை பார்க்க திருவிழாபோல திரண்டு விடுகிறார்கள். திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பொன்னகர் பகுதியில் நேற்று தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பெண்கள் நடனம் ஆடிய குத்தாட்டம் நிகழ்ச்சி களை கட்டியது. அதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் திரளாக கூடி நின்றனர்.

சமூக விலகல் இல்லை

கொரோனா வேகமாக பரவி வரும் வேளையில் தேர்தல் பிரசாரத்தின்போது பல விதிகளை கடைப்பிடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறும் வேட்பாளர்கள், நிர்வாகிகள் மீது தேர்தல் பறக்கும் படையினர் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ஆனாலும், வேட்பாளர்கள் மற்றும் அவரை ஆதரித்து பிரசாரம் செய்ய வரும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையிலான சமூக விலகளை கடைப்பிடிப்பதில்லை. பெரும்பாலானவர்கள் முக கவசமும் அணிவதில்லை.

தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் நேரத்தில் எத்தனை வழக்கு போட்டாலும் கவலையில்லை என்று வேட்பாளர்களும் தங்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்