தொட்டியம் மதுரை காளியம்மன் தேர் திருவிழா: ஆயிரம் பானைகளில் பொங்கல் வைத்து வழிபாடு
தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் பங்குனி தேர் திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து நேற்று அம்மனுக்கு 1,000 பானைகளில் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது.
தொட்டியம்,
தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் பங்குனி தேர் திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து நேற்று அம்மனுக்கு 1,000 பானைகளில் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது.
காப்பு கட்டும் நிகழ்ச்சி
திருச்சி மாவட்டம் தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் பங்குனி பெருவிழா கடந்த 16-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து வரதராஜபுரத்தில் இருந்து பக்தர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளநீர்கள் கொண்டு இளநீர் காவடி எடுத்து வந்து அம்மனுக்கு விடிய, விடிய சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
1,000 பானைகளில் பொங்கல் வைத்து வழிபாடு
நள்ளிரவு கருவறையில் மதுரைகாளியம்மன் முன் இரண்டு பெரிய பானைகளில் நெய் ஊற்றி எட்டுமுழ வேட்டியால் இரண்டு பெரிய திரிகள் தயாரிக்கப்பட்டு விளக்கு ஏற்றப்பட்டது. தொடர்ந்து கோவில் நடை அடைக்கப்பட்டது. கோவில் ஒருவாரம் அடைக்கப்பட்டிருக்கும்.
அப்படி அடைக்கப்படும் கோவில் ஒரு வார காலத்திற்கு எந்தவித பூஜையும், பக்தர்கள் அனுமதியும் கிடையாது. நேற்று இரவு அடைத்த கோவிலுக்கு 1,000 பானைகளில் பொங்கல் வைத்து கோவில் முன் படையலிட்டு சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் மற்றும் சுற்று புற பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.