சென்னையில் இருந்து தேர்தல் பொருட்கள் லாரியில் நெல்லை வந்தன
சென்னையில் இருந்து தேர்தல் தொடர்பான 15 வகையான பொருட்கள் லாரியில் நெல்லைக்கு வந்தன.
நெல்லை, மார்ச்:
சென்னையில் இருந்து தேர்தல் தொடர்பான 15 வகையான பொருட்கள் லாரியில் நேற்று நெல்லை வந்தன.
சட்டசபை தேர்தல்
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை என 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மேற்கண்ட தொகுதிகளில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் தயார் செய்யும் பணி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லும் பணி உள்ளிட்டவைகள் நடந்து வருகின்றன.
சென்னை, திருச்சி, விருத்தாசலம் ஆகிய அரசு அச்சகங்களில் இருந்து தேர்தல் விண்ணப்பப்படிவங்கள் ஏற்கனவே வந்து கொண்டிருக்கின்றன. வாக்காளர் விண்ணப்பப் படிவங்கள் சென்னையில் இருந்து ஏற்கனவே வந்துள்ளன.
15 வகையான பொருட்கள்
இந்த நிலையில் தேர்தல் தொடர்பான 15 வகையான பொருட்கள் நேற்று சென்னையில் இருந்து நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பெரிய லாரி மூலம் வந்தன. அவற்றை ஊழியர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கீழ்த்தளத்தில் இறக்கி வைத்தனர். அதில் மை பாட்டில்கள், கவர்கள், மெழுகுவர்த்திகள், பென்சில், பேனாக்கள், பாலித்தீன் கவர் உள்ளிட்ட 15 வகையான பொருட்கள் இருந்தன. தேர்தல் தொடர்பான பொருட்கள் தொகுதி வாரியாக பிரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பொருட்கள் இன்று (வியாழக்கிழமை) தொகுதி வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்படுகின்றன.