சுயேச்சை வேட்பாளர் திடீர் தர்ணா போராட்டம்
சுயேச்சை வேட்பாளர் திடீர் தர்ணா போராட்டம் நடத்தினார்.
திருமங்கலம்,மார்ச்
திருமங்கலம் தொகுதியில் மொத்தம் 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் சுயேச்சையாக போட்டியிடும் மு.ராமநாதன் என்பவர் நேற்று திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து அவர் கூறுகையில், “அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு ஏற்கனவே சின்னங்கள் இருப்பதால் அக்கட்சிகளின் வேட்பாளர்கள் பிரசாரத்தை தடையின்றி தொடங்கி விடுகின்றனர். ஆனால் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டு 10 நாட்களுக்குள் பிரசாரம் முடிந்து விடும். மேலும் சுயேச்சை வேட்பாளர்கள் சின்னம் ஒதுக்கப்பட்டதற்கு பின்பு காவல்துறை மற்றும் தேர்தல் அலுவலர்களிடம் முறையான அனுமதி வாங்க வேண்டியது உள்ளது. இதற்காக தேர்தல் அலுவலர், போலீசாரிடம் மாறி மாறி செல்ல வேண்டியுள்ளது. இதனால் கால விைரயம், பண விைரயம் ஏற்படுகிறது. தற்போது திருமங்கலம் தாலுகா அலுவலகத்திற்கு அனுமதி வாங்க வந்தபோது அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் இல்லை. எனவே போராட்டத்தில் ஈடுபட்டேன். எனவே சுயேச்சை வேட்பாளர்களுக்கு தாமதமின்றி சின்னம் ஒதுக்கீடு செய்து அனுமதி வாங்குவதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.” என்று தெரிவித்தார்.