பொள்ளாச்சி தொகுதியில் தபால் வாக்கு அளிக்க 808 பேர் விருப்பம்
பொள்ளாச்சி தொகுதியில் தபால் வாக்கு அளிக்க 808 பேர் விருப்பம் தெரிவித்து உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி தொகுதியில் தபால் வாக்கு அளிக்க 808 பேர் விருப்பம் தெரிவித்து உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆலோசனை கூட்டம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர் கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக தகுதியான நபர்கள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.
மேலும் தபால் வாக்கு அளிக்க விருப்பம் உள்ளதா? இல்லையா? என்று கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தபால் வாக்கு
கூட்டத்திற்கு தேர்தல் நடத்தும் அதிகாரி வைத்திநாதன் தலைமை தாங்கி பேசினார். இதில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி தணிகவேல் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி தொகுதியில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் 6438 உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது.
இவர்களில் விருப்பம் உள்ளவர்கள் தபால் மூலம் வாக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக 12 டி விண்ணப்பம் வழங்கப்பட்டு உள்ளது.
808 பேர் விருப்பம்
இந்த விண்ணப்பத்தில் தபால் மூலம் வாக்கு அளிக்க விருப்பம் உள்ளதா? இல்லையா? என்பதை பூர்த்தி செய்து கொடுத்தனர். அதன்படி பொள்ளாச்சி தொகுதியில் 808 பேர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் கொடுத்து உள்ளனர்.
கிராம நிர்வாக அலுவலர்கள் தபால் வாக்கு அளிக்கும் நபர்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும். இதற்காக 10 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு மண்டல அலுவலர், வீடியோ கிராபர் உள்பட 5 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் சம்பந்தப்பட்ட நபரின் வீட்டிற்கு சென்று ரகசியமாக வாக்களிக்க தேவையான ஏற்பாடுகள் செய்வார்கள்.
மேலும் வாக்களித்த பின் வாக்குசீட்டை பாதுகாப்பாக கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.