விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா பரிசோதனை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா பரிசோதனை
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் தே.மு.தி.க. வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா பரிசோதனை செய்ய வந்த அதிகாரிகளுடன் தே.மு.தி.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரேமலதா விஜயகாந்த்
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளராக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இவர் கடந்த 18-ந்தேதி தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீசுடன் விருத்தாசலம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு, விருத்தாசலத்தில் தங்கி, தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுதீஷ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையறிந்த கடலூர் மாவட்ட சுகதாரத்துறை அதிகாரிகள் வேட்புமனு தாக்கலின்போது சுதீசுடன் இருந்த பிரேமலதா விஜயகாந்த், தொகுதி பொறுப்பாளர் ராஜ் மற்றும் தேர்தல் அதிகாரிகள் அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.
அதிகாரிகளுடன் தே.மு.தி.க.வினர் வாக்குவாதம்
அதன்அடிப்படையில் சுகாதாரத்துறை ஆய்வாளர் ராஜா தலைமையிலான குழுவினர் நேற்று விருத்தாசலம் தொகுதிக்குட்பட்ட செராமிக் தொழிற்பேட்டை பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பிரேமலதா விஜயகாந்திடம் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என கூறினர். அதற்கு பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் முடிந்ததும் தான் தங்கியுள்ள அறைக்கு வாருங்கள் அப்போது எடுத்துக் கொள்ளலாம் என கூறினார். இருப்பினும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் என கூறினர். இதனால் ஆத்திரமடைந்த தே.மு.தி.க.வினர், தற்போது பிரேமலதா விஜயகாந்த் பிரசாரத்தில் உள்ளதால், பிறகு பரிசோதனை செய்து கொள்ளலாம் என கூறி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கிருந்து சென்று விட்டனர்.
பரிசோதனை
அதன்பிறகு தேர்தல் பிரசாரத்தை முடித்த பிரேமலதா விஜயகாந்த் தான் தங்கியுள்ள அறைக்கு சென்றதும், சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மதியம் 2.30 மணியளவில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவருடன் இருந்த விருத்தாசலம் தொகுதி பொறுப்பாளர்கள் ராஜ், ஜானகிராமன், கார் டிரைவர் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.
பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா பரிசோதனை செய்த சம்பவம் தே.மு.தி.க.வினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.