கொரோனா பரவல் எதிரொலி திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் கடும் கட்டுப்பாடு முக கவசம் அணியாத மணமக்கள் உள்பட 10 பேருக்கு அபராதம்

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் கடும் கட்டுப்பாடு

Update: 2021-03-24 17:16 GMT
நெல்லிக்குப்பம்,

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலுக்கு வர பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று கோவிலுக்கு முக கவசம் அணியாமல் வந்த மணமக்கள் உள்பட 10 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

திருமணம்

கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் 108 வைணவ  தலங்களில் முதன்மை பெற்றதாகும். இங்கு சுபமுகூர்த்த நாட்களில் அதிக அளவில் திருமணம் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஜனவரி 2021 வரை கோவிலில் திருமணம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. 
இதையடுத்து கடந்த 2 மாதமாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு, சுபமுகூர்த்த நாள் அன்று 50 திருமணங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு, திருமணம் நடைபெற்று வருகிறது. 
அந்த வகையில் சுப முகூர்த்த நாளான நேற்று கோவில் அருகே உள்ள மண்டபங்களில் திருமணங்கள் நடைபெற்றது. முகூர்த்த நாள் என்பதால் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன் உத்தரவின் பேரில் செயல் அலுவலர்கள் முருகன், சங்கர், முத்துலட்சுமி ஆகியோர் தலைமையிலான ஊழியர்கள் 3 குழுக்களாக பிரிந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா? என தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

போக்குவரத்து நெரிசல்

அப்போது கோவிலுக்கு வந்த பெரும்பாலான பக்தர்கள், முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் சென்றதை காணமுடிந்தது. இதைபார்த்த அதிகாரிகள் குழுவினர் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத மணமக்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்ததோடு, கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் கொரோனா பரவல் தற்போது அதிகரித்துவரும் காரணத்தால் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பயன்படுத்தி சாமி தரிசனம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.
மேலும் நேற்று ஒரே நாளில் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றதால், கோவில் செல்லும் சாலை மற்றும் கடலூர்-பாலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து உதவி ஆணையர் பரணிதரன் கூறுகையில், திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலுக்கு வரக்கூடிய அனைத்து பக்தர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டாலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்