மஞ்சூர் அருகே டீ கடையை சூறையாடிய கரடி

மஞ்சூர் அருகே டீ கடையை கரடி சூறையாடியதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Update: 2021-03-24 15:24 GMT
ஊட்டி,

குந்தா வனச்சரகத்துக்கு உட்பட்ட மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் கரடி நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மஞ்சூர் அருகே ஓணிகண்டி பகுதியில் கனகன் என்பவர் டீக்கடையை மூடி விட்டு சென்றார். 

நள்ளிரவில் அப்பகுதியில் நடமாடிய கரடி ஒன்று டீக் கடையின் தகரத்தால் ஆன கதவை உடைத்து உள்ளே புகுந்தது. அங்கு இருந்த பாலை கரடி குடித்துவிட்டு, மற்ற உணவுகளை தின்றது. 

மேலும் டீக்கடையை சூறையாடிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டது. மறுநாள் காலையில் வழக்கம் போல் கடையை திறக்க வந்த கனகன் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதையும், பொருட்கள் சிதறி கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 


இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில், டீக்கடையை கரடி சூறையாடியது தெரியவந்தது. பின்னர் அப்பகுதியில் கரடி நடமாட்டம் உள்ளதா என்று கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த சம்பவத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும்  டீக்கடையை உடைத்து சூறையாடிய கரடியை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்