தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்.

Update: 2021-03-24 14:23 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
தேர்தல் அலுவலர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் நடக்கிறது. இதற்காக வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. 
இதனை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ், தேர்தல் பொது பார்வையாளர்கள் ஜுஜவரப்பு பாலாஜி (தூத்துக்குடி), அஸ்வானி குமார் சௌதாரி, (விளாத்திகுளம், கோவில்பட்டி), அனில் குமார் (ஓட்டப்பிடாரம்) மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் கூறியதாவது:-
முன்னேற்பாடுகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் எந்திரங்கள், தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகள் உள்ளிட்டவைகளை தேர்தல் பொது பார்வையாளர்களுடன் நேரில் வந்து ஆய்வு செய்யப்பட்டது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அனைத்து பகுதியிலும் கொேரானா விதிமுறைகளை எவ்வாறு கடைபிடிப்பது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்ககூடிய பகுதிகளையும் ஆய்வு செய்தோம். இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் தேர்தல் பொது பார்வையாளர்களும் பார்வையிட்டனர். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் மின்னணு வாக்குபதிவு எந்திரங்களை வைக்ககூடிய ஸ்ட்ராங் ரூமில் என்னென்ன பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதும் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் நமது மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற தேவையான வசதிகள், முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இ்வ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
ஆய்வின் போது தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வெள்ளைச்சாமிராஜ், உதவி செயற்பொறியாளர் (மின் பணிகள்) ராமலிங்கம், உதவி பொறியாளர்கள் பாலா, தினேஷ் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்