தூத்துக்குடியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 1523 ரவுடிகள் மீது நடவடிக்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தகவல்
தூத்துக்குடியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 1523 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்தும் வகையில், 1,523 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
1,523 ரவுடிகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி குற்றப்பட்டியலில் இடம் பெற்று உள்ள 1,523 ரவுடிகள் மீது குற்ற விசாரணை நடைமுறைச்சட்டம் 107, 109 மற்றும் 110-ன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் தேர்தல் நேரத்தில் பிரச்சனையில் ஈடுபடக்கூடியவர்கள் 313 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதே போன்று உரிமம் பெற்ற 536 துப்பாக்கிகளில் விலக்கு அளிக்கப்பட்ட துப்பாக்கிகள்
84 தவிர அனைத்து துப்பாக்கிகளும் அந்தந்த போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
குண்டர் சட்டம்
இது தவிர இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை வரை 44 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஜெயலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரசாரத்தில் ஈடுபடும் போது, ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 பேர் அடங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் இதுவரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கொரோனா
தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. ஆகையால் மக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்கவேண்டும். கட்டாயம் முககவசம் அணிதல்,
சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு சுத்தம் செய்தல் போன்றவற்றை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். எனவே பொதுமக்கள் கொரோனா தொற்று நோய் தாக்கத்தில் இருந்து மீள்வதற்கு தமிழக அரசு அவ்வப்போது அறிவிக்கும் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
ஒத்துழைப்பு
வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருள் கொடுப்பதும், வாக்காளர்கள் பெறுவதும் சட்டப்படி குற்றம் ஆகும். நேர்மையான முறையில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு, தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.