கஞ்சா வியாபாரிக்கு 10 ஆண்டு சிறை
கஞ்சா வியாபாரிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்புக்கூறியது
கோவை,
கஞ்சா வியாபாரிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்புக்கூறியது.
கோவை குட்ஷெட் சாலையில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு நபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள்.
இதில் அவர் வைத்திருந்த பையில் 24 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் கஞ்சா வைத்திருந்தவர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த சோமு முத்தையா (வயது 50) என்று தெரியவந்தது.
அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கஞ்சா வியாபாரியான சோமு முத்தையா கஞ்சாவை கோவைக்கு விற்பனைக்காக கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கு கோவையில் உள்ள இன்றியமையாத பொருட்கள் கடத்தல் தடுப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் நேற்று தீர்ப்புக் கூறப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சோமு முத்தையாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி மலர் வாலண்டினா தீர்ப்புக் கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் எஸ்.பி.சந்திரசேகர் ஆஜரானார்.