வேடசந்தூர் ஒன்றியத்தில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.காந்திராஜன் கிராமம், கிராமமாக தீவிர வாக்கு சேகரிப்பு
வேடசந்தூர் ஒன்றியத்தில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.காந்திராஜன் கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார்.
வேடசந்தூர்,
வேடசந்தூர் ஒன்றியத்தில் தி.மு.க. வேட்பாளர் எஸ்.காந்திராஜன், வேடசந்தூர் வடக்கு ஒன்றிய பகுதிகளான பூதிப்புரம், விருதலைபட்டி, நாச்சியார்பாளையம், ரெங்கநாதபுரம், பாறைப்பட்டி, ராஜாகவுண்டன்வலசு, நாச்சியார்பாளையம், பாலப்பட்டி, நரசிங்கபுரம் என கிராமம், கிராமமாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
அப்போது பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இந்த பிரசாரத்தின் போது காந்திராஜன் பேசியதாவது:-
வாக்காளர் பெருமக்களாகிய நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்தால் வேடசந்தூர் ஒன்றிய பகுதியில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களை உடனடியாக நிறைவேற்றுவேன். மாயனூர் அணை காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை போன்று நீண்ட நாட்கள் பயன்பெறும் வகையில் மாயனூர் அணையில் இருந்து குழாய் மூலமாகவோ அல்லது வாய்க்கால் மூலமாகவோ தண்ணீர் கொண்டுவந்து குளங்களை நிரப்பி விவசாயத்தை செழிப்படைய செய்வேன். வேலைவாய்ப்பின்றி தவித்து வரும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவேன். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக வேடசந்தூர் சமூக ஆர்வலரும், காங்கிரஸ் கட்சிப் பிரமுகருமான நம்பி என்ற நெப்போலியன் தி.மு.க. வேட்பாளர் எஸ். காந்திராஜனுக்கு மலர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த பிரசாரத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதா பார்த்திபன், தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா சாமிநாதன், தொகுதி பொறுப்பாளர் மோகன், காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவர் காசிபாளையம் சாமிநாதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், காங்கிரஸ் கட்சி உறுப்பினர் தண்டபாணி, வேடசந்தூர் சமூக ஆர்வலரும் காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான நம்பி என்ற நெப்போலியன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.