கிள்ளியூர் தொகுதியில் காய்கறி, மீன் வியாபாரிகளை சந்தித்து வாக்குகள் சேகரித்த வேட்பாளர்கள் - ஊழல் ஆட்சியை அகற்ற காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள் என பிரசாரம்

கிள்ளியூர் தொகுதியில் காய்கறி, மீன் வியாபாரிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய வேட்பாளர் விஜய் வசந்த், ஊழல் ஆட்சியை அகற்ற காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள் என பிரசாரம் செய்தார்.

Update: 2021-03-24 02:23 GMT
நாகர்கோவில்,

மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் விஜயகுமார் (என்ற) விஜய் வசந்த், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் நேற்று ஊரம்பு பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்கள், காய்கறி, மீன் வியாபாரிகள், நூறு நாள் வேலை பணியாளர்கள் ஆகியோரை சந்தித்து வாக்கு சேகரித்தனர். அப்போது கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் மக்களிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நடைபெற உள்ள தேர்தல் மூலம் தமிழகத்தில் நடைபெறும் ஊழல் ஆட்சியை ஒழிக்கவும், மக்கள் ஆட்சி நிறுவப்படவும் தி.மு.க. கூட்டணியான மதசார்பற்ற கூட்டணிக்கு பெருவாரியான வாக்குகள் அளித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக முதல்-அமைச்சராக்க குமரி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் புதிய எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மறைந்த எனது தந்தை எச்.வசந்தகுமார் 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த ஆண்டு தனது உயிரை இழந்தார். அவர் குமரி மாவட்ட மக்களுக்கு பல்வேறு தொண்டுகளை, உதவிகளை செய்து கொடுத்துள்ளார்.

குமரி மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது. அந்த கனவை செயல்படுத்த எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். எனவே நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் எனக்கும், கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளரான ராஜேஷ்குமாருக்கும் கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராஜேஷ் குமார் பேசுகையில் கூறியதாவது:-

கிள்ளியூர் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கியது முதல் செல்லும் இடமெல்லாம் மக்களின் எழுச்சியை காணமுடிகிறது. இது கடந்த 5 ஆண்டுகளில் தொகுதி முழுவதும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் செய்யப்பட்ட வளர்ச்சி பணிகள், சமூக பணிகள் மற்றும் கல்வி, மருத்துவம் போன்ற பல்வேறு உதவிகள் இதற்கு எடுத்து காட்டாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பிரசாரத்தின் போது ஊரம்பு பகுதியில் உள்ள மீ்ன்சந்தையில் மேற்கூரை அமைக்க வேண்டும் என்று அங்குள்ள மக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு வேட்பாளர் ராஜேஷ்குமார் உங்களது வாக்குகளை கை சின்னத்துக்கு தாருங்கள். நான் மீண்டும் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட பிறகு ஊரம்பு பகுதி மீன் சந்தையில் மேற்கூரை அமைப்பதுதான் முதல் பணியாக இருக்கும் என்று உறுதி அளித்தார். அங்குள்ள மக்களும் கை சின்னத்துக்கு வாக்களிப்பதாக உறுதி கூறினர்.

மேலும் செய்திகள்